26.09.2024 அன்று மீண்டும் மதுரைஉயர்நீதி மன்றம் தாமிரபரணி வழக்கை விசாரணைக்குகொண்டு வந்தது. நாம் தாயரித்த அறிக்கையை நமது வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி நீதியரசர்களிடம் சமர்பித்தனர். அதை கண்ட நீதியரசர்கள் சுவாமிநாதன், புகழேந்தி அடங்கி அமர்வில் நிறைய கேள்விகளை எழுப்பினார்கள்.
நெல்லை நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது அரசு தரப்பில், பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள், கழிவு நீரை தாமிரபரணியில் கல க்கிறது. எந்த பின் விளைவுகளையும் எதிர் பார்க்காமல் கழிவு நீரை கலந் து வருகின்றனர். இந்த பிரச்சனை தவிர்க்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் ஒவ்வொரு கட்டமாக. கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநாகராட்சி தான் அதிக அளவில் கழிவு நீர் கலக்கிறது. 6 மாதத்தில் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்படுத்தி விடுவோம். உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே. இதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா. கழிவு நீர் கலக்கும் புகைபடங்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது. என்றனர். மேலும் புதியதலைமுறை மாவட்ட நிருபர் மருது பாண்டியன் அவர்கள் தகவல் உரிமை சட்டம் மூலமாக கேள்வி கேட்டு, அதன்படி தாமிரபரணியில் எடுக்கப்பட்ட தண்ணீருக்கு அரசுக்கு தொழில் சாலை கட்ட வேண்டிய பாக்கி சுமார் 26 கோடிருபாய் உள்ளது. என்பது குறித்தான ஆவணங்களையும் தாக்கல் செய்து இருந்தோம்.
தாமிரபரணியில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் 1.50 ரூபாய்க் கு தனியார் நிறுவனங்கள் அரசுக்கு கட்டணம் செலுத்தி எடுக்கின்றனர்.
ஆனால், தாமிரபரணி நீரை அனுமதி பெற்று 7 தொழிற்சாலைகள் எடுத்ததில் மட்டும் , ரூ. 260 கோடி நிலுவை தொகை அரசுக்கு செலுத்த வேண்டியதுள்ளது. இது போல் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகள் நீர் வரி செலுத்த வேண்டியது நிலுவையில் உள்ளதா? என்பது குறித்து ம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். என்றும் நீதியரசர்கள் ஆணையிட்டனர்.
கழிவு நீர் கலப்பதை தடுக்க , கடந்த 2018 ல் தாக்க ல் செய்த வழக்கு, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் பின் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை . எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பொது பணி துறை, நெல்லை மாநாகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில், தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். என எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு சார்பில் ஆஜர் ஆன நீதிபதிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
30.09.2024 மீண்டும் மதுரைஉயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அதிகாரிகள் வீடுகளில் இது போன்று கழிவு நீர் கலந்தால் பார்த்துக் கொண்டு இருப்பார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நெல்லை மாநகராட்சி கமிஷனர் சார்பில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கிறன்றன. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை முற்றிலும் தடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.
எங்களது வழக்கறிஞர் அழகு மணி ஆஜராகி நெல்லை மநாகராட்சியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து இரு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள். தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் முழுவதும் தடுக்கப்பட வேண்டும். இதனை முன் மாதிரியாக கொண்டு மற்ற ஆறுகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். தாமிரபரணி ஆறு தொடக்கம் முதல் கடலில் கலக்கும் பகுதி வரை அதன் இருபுறமும் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் இந்த ஆற்றில் கலக்கும் கழிவு நீரை அவரவர் பகுதிகளில் தடுப்பதற்கான திடடங்கள் என்னென்ன என்பது குறித்து தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் கோர்டுக்கு உதவுவதற்காக வக்கீல் அருள் நியமிக்கப் படுகிறார். மேலும் நெல்லை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் நாங்களே நேரில் வந்து தாமிரபரணி ஆற்றினை ஆய்வு செய்வோம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 3 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதைத்தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி ஆற்றுக்கு உரிமை கோரும் போது கடமைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும. இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், நெல்லை தூத்துக்குடி செயற்பொறியாளர்களை வழக்கில் சேர்த்து உத்தரவு வழங்கிய இந்த தீர்ப்பு தாமிரபரணி ஆர்வலர்களும் மிகவும் சந்தோசத்தினை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்றம் தாமிரபரணி ஆற்றின் மீது எடுத்து நடவடிக்கை குறித்து விசாரித்து வருவதால் விரைவில் தாமிரபரணி சாக்கடை இல்லாத நதியாக மாறும், மண்டபங்கள் படித்துறைகளை முறையாக சீரமைக்கப்படும் என தாமிரபரணி ஆர்வலர்கள் நம்பிக்கை யோடு உள்ளனர்.
3.10.2024
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட 5 உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான நிதி மற்றும் எந்திரங்களை பெறுவதில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும்படி பல மாதங்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் அல்லது நஷ்டஈடு விதிக்க வேண்டும் என்றும் கோரி எனது சார்பில் மூத்த வக்கீல் அழகுமணி மனு தாக்கல் செய்தார்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும், தாமிரபரணியில் கழிவுநீரை கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சார்பில் ஆஜரான வக்கீல், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நாங்கள் கடிதம் அனுப்பி அறிவுறுத்தி கண்காணித்து வருகிறோம் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்போது உத்தரவு பிறப்பித்தது என கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல், சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளதா? அதன் பேரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், கழிவுநீர் கலப்பதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகளின் இந்த கேள்வி அனைவரையும் யோசிக்க வைத்தது.
விசாரணை முடிவில், தாமிரபரணியில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் இதனை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த கோர்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22&ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பத்திரிக்கை தலையங்கம்
இதற்கிடையில் முக்கிய பத்திரிக்கைகள் தலையங்கம் எழுத ஆரம்பித்தனர். இந்து தமிழ் திசை பத்திரிக்கை 2.10.2024 அன்று எழுதிய தலையங்கத்தில் தாமிரபரணியில் கழிவு நீர் தடுப்பது யார் பொறுப்பு-? என கேள்விகள் கேட்டனர்.
அந்த தலையங்கம் என்ன சொல்கிறது. அந்த தலையங்கம் தாமிரபரணியில் அவலத்தினை தோலுரித்து அல்லவா காட்டுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரபணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை தமிழ்நாட்டில் நீர் நிலைகளின் பராமரிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
திருநெல்வேலி தூத்துக்கு-டி தென்காசி விருதுநகர் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. குடிநீர், விவசாயம், வழிபாடு ஆகியவற்றிற்கு மக்கள் சார்ந்துள்ள தாமிரபரணியில் அதற்கு நேர்மாறாகக் கழிவு நீர் கலக்கப்படுவதும், கரைகளில் குப்பை கொட்டப்படுவதும் ஓர் அவலமான வாடிக்கை. வீடுகள் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் கழிவுநீரை ஆற்றில் விடுவதைச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தடுக்க வேண்டும் ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
2018 இல் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனவும் கரையில் உள்ள மணடபங்களையும் படித்துறைகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கு தொடுத்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் படி நீதி மன்றம் அப்போதே கூறியிருந்தது. இவ்வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 17 இடங்களில கழிவு நீர் ஆற்றில் கலப்பதாக மாநகராட்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். மிகத் தீவிரமான மாசுபாடு சேர்ந்தாலும் நிர்வாகத்தின் போக்கு மாறாததைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான நீதிபதிகள் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா உங்கள் வீடுகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா-? என்று கோபத்துடன் கேட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
தாமிரபரணியில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் அளவுக்கு மட்டும் கழிவுநீர் கலப்பதாக 2016 இல அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தினம் ஏறக்குறைய 44.313 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 31.91 மில்லியன் லிட்டர் திருநெல்வேலி மாநகராட்சி யிலிருந்து வெளியேற்றப் படுகிறது. தாமிரபரணி நீரில் குளிப்பவர்களுக்கு அரிப்பு தலைமுடி நிறம் மாறுதல் போன்ற கோளாறுகள் வருவதாகவும் கூறப்படுகிறது.
2012 இல் ஆற்றை ஓட்டி பாப்பான் குளத்திலிருந்து ஆறுமுகநேரி வரைக்கும் 80 கிமீ தொலைவுக்கு மாசு பாடு அடைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. கடந்த ஆண்டு ஒரு தனியார் ஊடக நிறுவனம் தாமிரபரணி ஆறு கடலிடில் கலக்கும் புன்னக்காயலில் நீரை சோதனைக்கு உட்படுத்தி அது குடிக்கத் தகுந்ததல்ல எனக் கூறியது. கள நிலவரத்துக்கு அழுத்தம் கொடுப்பது போல நீதிமன்றம் தற்போது அபாய மணியை ஒலித்துள்ளது.
மழை நீர் ஆற்றில் கலப்பதற்காக அமைக்கபட்ட வடிகாலில், கரையோரம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் பாதாளச் சாக்கடைத் திட்டக் கடடுமானப் பணிகள் விரைவில் முடிவதையொட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டும் என்றும் திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகினறனர். மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும் பரிகாரங்களுக்காகவும் ஆற்றை மாசுபடுத்துவது, தங்கள் எதிர்காலத்துக்கு தாங்களே நெருப்பு வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்றே சொல்லாம். தமிழக அரசு தாமிரபரணியை காக்க எடுக்கும் நடவடிக்கைகள் இதே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பிற நீராதாரங்களைக் காக்கும் பணிகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்
மீண்டும் விசாரணை
22.10.2024
வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது நீதியரசர்கள் ஜி.ஆர். சாமிநாதன், புகழேந்தி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த வழக்கில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என 24 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
24.10.2024
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதியரர்கள் ஜி.ஆர். சாமிநாதன், புகழேந்தி ஆகியோர் விசாரித்ததோடு அடுத்த வாய்தாவுக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் இந்த வழக்கில் ஆஜர் ஆக வேண்டும் என நீதியரசர்கள் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் வழக்கறிஞரை ஆஜராக அனுப்பியிருந்தார்கள். எனவே நீதியரசர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் சிறிது நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் காலில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி அவர்கள் வீடியோ கால் மூலம் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் இதுவரை தாமிரபரணியை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டனர். அவர்கள் சாக்கடை கலக்க கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் 2021ஆம் ஆண்டு இதற்காக திருநெல்வேலி மாநகராட்சிக்கு 28கோடி ரூபாய் அபதாரம் விதித்துள்ளோம் என்று கூறினார். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து உள்ளீர்களா? என கேள்வி கேட்டனர் நீதியரசர்கள். மேலும் பேப்பர் மூலம் நடடிக்கை எடுத்துள்ளீர்கள். மற்றபடி என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதியரசர்கள் கேட்டனர்.
தாமிரபரணியில் கழிவு நீரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் காலம் தாழ்த்துகீறீர்கள். இதற்காக கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? உத்தரவு இட வேண்டுமா? இதை நடை முறைப்படுத்த வேண்டமா? உங்களின் இந்தச்செயல் வருத்தமளிக்கிறது. கொஞ்ச நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது குறித்த ஆவணங்களை கோர்டில் நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
சேரன்மகாதேவி பேரூராட்சியை சேர்ந்தவர்கள், எங்கள் பேரூராட்சி சாக்கடை எதுவுமே தாமிரபரணியில் கலக்க வில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்காக நீதிமன்றம் மூலம் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்வார் என நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
மனுதாரரின் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி, தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் அடுத்த வாய்தாவில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டார்.
மண்டபம், படித்துறை போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க இயலவில்லை என்றால் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து பராமரிக்க வேண்டும். புதியதாக ஒரு மண்டபம் கட்டவேண்டும் என்பது கடினமானது. நமது முன்னோர்கள் இந்த வேலையை திறம்பட செய்துள்ளார்கள். ஆனால் நாமோ நமது முன்னோர்கள் உருவாக்கிய மண்டபங்கள், படித்துறைகளை பராமரிக்க தவறியுள்ளோம். என வருத்தம் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கை ஒத்தி வைத்தார்கள்.
தொடர்ந்து தாமிரபரணியில் சாக்கடை கலப்பதை கட்டுப்படுத்த மதுரை உயர்நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை நிச்சயம் தாமிபரணியை பழைய நதியாக மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.