மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதை நடும் பணியின் தொடர்ச்சியாக நல்லூர் மேல குளக்கரையில் பனை விதைகள் நடும் பணியை ஆழ்வார்திருநகர் ஒன்றிய சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார் .
மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளுடன் சமூக அக்கறையோடு, சேவை மனப்பான்மையுடன் நிதி உதவி எதுவும் பெறாமல் நீர் பிடிப்பு பகுதிகளில், மண்ணரிப்பு தடுக்க, கரையை வலுப்படுத்த ஆற்றங்கரை, குத்தங்கரை, வாய்க்காங்கரை பகுதிகளிலும் புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க கடற்கரை பகுதிகளிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், சாலை ஓரங்களிலும் தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சேதமடைந்த குளத்தாங்கரை, வாக்காங்கரை, தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதில் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின இதனால் உயிர்சேதங்கள், பொருள் சேதங்கள் உட்பட பல்வேறு சேதங்கள் பெருமளவில் ஏற்பட்டது. சேதங்களை தடுக்க வேண்டுமென்றால் நீர் பிடிப்பு பகுதிகளில் கரையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நல்லூர் மேல குளக்கரையில் பனைமர விதைகள் நடும் பணி தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு தலைவரும்,மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அனைவரையும் வரவேற்றார். ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா, தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வார் திருநகரி ஒன்றிய சேர்மன் ஜனகர் பனை மர விதைகளை விதைத்து பணியை தொடங்கி வைத்தார் . அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் வெள்ளப் பாண்டியன், மேற்பார்வையாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் சொ.சு. தமிழினியன், மாவட்ட தலைவர் காயல். செல்வன் தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இதில் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற செயலாளர் கிருஷ்ணம்மாள், உதவியாளர் பரமேஸ்வரி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்டம் நீர் நிலைகள் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு குழு ஆகியோர் கலந்து கொண்டனர்
முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக் கரையோரம், சேதுக்கு வாய்த்தான் குளம், கடம்பாகுளம், கடம்பாகுளம் மறுகால் ஓடை, காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளில் 10 லட்சம் பனைமர விதைகள் விதைக்கப்பட உள்ளன.


