தூத்துக்குடி அருகே அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, சூசை பாண்டியா புரத்தைச் சேர்ந்தவர் ஏசுவடியான் மகன் லூர்து பிரான்சிஸ் (56). இவர் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று பிற்பகல் 1 மணியளவில் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அங்கு, சான்றிதழ் வாங்க வந்ததுபோல் வந்த 2 மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2.40 மணியளவில் இறந்தார். இது குறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ்-க்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த 13ம் தேதி கலியாவூர் பகுதியில் ஒரு கும்பல் மணல் கடத்தியுள்ளனர். இது பற்றி அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தார்.
இதனால் மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக கலியாவூரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினராக முருகன் மகன் மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விஏஓ படுகொலை சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


