தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சங்கதலைவர் ரத்ன சேகர், பொருளாளர் சின்ன சாமி,இணை செயலாளர் நூர் முகமது, செல்லமுத்து, நிர்மல் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு செங்கல் சூளைகளுக்கு மண் பெர்மிட் வழங்க கனிம சலுகை விதி 44 ஏற்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டதற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்படி அரசாணையை இதுவரை எந்த மாவட்டத்திலும் செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால் செங்கல் சூளைகள் மண் இல்லாமல் சூளைகளை மூடும் அபாயம் உள்ளது. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நிலை நேரிடும். அதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக கூலி ஆட்களை கொண்டு நடைபெறும் தொழில் செங்கல் தயாரிக்கும் தொழிலாகும். எனவே பல லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் பாதிப்புள்ளாகும். எனவே புதிய அரசாணை எண் 213&ன் படி உரிய பெர்மிட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் கூறியிருந்தார்கள். மற்றுமொரு மனுவையும் அவர்கள் முதல்வரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
கிராவல் மண் என்ற பெயரில் கம்பெனிக்காரர்கள் செங்கல் சூளைகளுக்கு எந்தவித அனுமதி சீட்டும் இல்லாமல் மண் அடிக்க முன்வருகிறார்கள். அதை வாங்கினால் செங்கல் சூளைகளில் திருட்டு மண் வைத்திருப்பதாகக் கருதி அதிகாரிகள் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே, சிறு கனிம சலுவை விதி 44 ஐ உடனடியாக நடைமுறைப் படுத்தி மூன்று மாத பர்மீட்டை 15 நாட்களுக்குள் வழங்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
செங்கல் சூளைகளுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகியது. அதை 15 நாட்களுக்குள் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், சிறுகனிம சலுகை விதி 19ன் படி மண் எடுக்க உரிய பர்மிட் கிடைக்க பசுமைத் தீர்ப்பாயத்தின் சான்று பெற கால தாமதம் ஆகிறது. இதை விரைவில் கிடைக்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
செங்கல் சூளைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் சான்று உடனடியாகக் கிடைக்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
செங்கல்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி இருந்ததை 01.04.2022 முதல் 12 சதவீதமாக மாற்ற உள்ளது. இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கும். எனவே, 5 சதவீத வரி அல்லது இனக்க வரி செலுத்தும் முறையை கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
செங்கல் உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கனிமவள அதிகாரிகளை வைத்து ஒரு கூட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தார்கள். இதற்கு ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.இவர்களுடன் அமைச்சர் துரை முருகன் உடனிருந்தார்.


