தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து பேய்க்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி, பனைகுளம் உள்பட 25க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் மின் ஊழியராக பணியாற்றி வருபவர் அறிவான்மொழி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் மது போதையில் அலுவலகத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு படுத்து விட்டார். இதனால் 25க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால் அலுவலகத்திற்கு போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. உடனே அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பாலசுந்தரம் குடிபோதையில் எழும்ப முடியாமல் கிடந்தார். அங்கு சென்ற பொதுமக்கள் அவரை எழுப்ப முயற்சித்தனர். ஆனாலும் அவர் எழும்பவில்லை. இதற்கிடையில் மற்றொரு மின் ஊழியர் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தார். இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து சாத்தான்குளம் உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கம்பியாளர் பாலசுந்தரம் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பாலசுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


