ஆறாம்பண்ணையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து 14வது நிதிக்குழு மானியத்தில் 10 லட்சமும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 12.65 லட்சம் என 22.65 லட்சம் மதிப்பில் இந்த கட்டிடப்பணிகள் கடந்த வருடம் தொடங்கியது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலம் திறப்பு விழா ஆறாம்பண்ணையில் இன்று நடந்தது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சேக் அப்துல்காதர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, கூடுதல் ஆணையாளர் பாக்கியலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
துணை ஆணையாளர் லெட்சுமணன், ஆறாம்பண்ணை முகைதீன் பள்ளிவாசல் தலைவர் இமாம் அலி, ஆழ்வார்கற்குளம் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் அப்துல்கனி, வார்டு உறுப்பினர்கள் இப்ராகிம், சையத் அலி பாத்திமா, மரியம்பானு, சுகாரா, மக்கள் நலப்பணியாளர் அருணாசலம், ஆறாம்பண்ணை மக்கள் நலச்சங்க தலைவர் சையத் மற்றும் ஊர்பொதுமக்கள், ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஹரிஹர சுந்தரம் நன்றி கூறினார்.


