நவதிருப்பதி கோயில்களின் யானைகள் பராமரிப்பு மையத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தார்.
தூத்துக்கு மாவட்டத்தில், தாமிரபரணி நதிக் கரையோரங்களில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயிலில் யானை ஆதிநாயகி, திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி தேவா்பிரான் கோயிலில் யானை லட்சுமி ஆகிய 3 யானைகள் உள்ளன.
இந்த யானைகளை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஆழ்வாா்தோப்பு ஏகாந்த லிங்கேஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஏழரை ஏக்கா் இடத்தில் நவத்திருப்பதி கோயில் யானைகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசா சேவா அறக்கட்டளை சாா்பில் ரூ.86 லட்சத்தில் யானைகள் தங்குவதற்கும், குளிப்பதற்கும் பராமரிப்பதற்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பராமரிப்பு மையத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நேற்று திறந்து வைத்தாா். அப்போது மூன்று கோயில் யானைகளும் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விரிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், கோயில் பராமரிப்புப் பணிகள், வருவாய் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரம்புகளை அகற்றவும், வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைமைவாய்ந்த மளவராயநத்தம் சிவன் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ளவும், நவத்திருப்பதி கோயில்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் திருவிழாவில் சுவாமி வீதிஉலாவின் போது, மின் கம்பிகளால் தடை ஏற்படுவதைத் தடுக்க மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி நிரந்தர தீா்வு காணப்படும் என்றாா். விழாவில் ஆழ்வாா்திருநகரி எம்பெருமானாா் ஜீயா், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசா சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


