தூத்துக்குடியில் ஏழைப்பெண்களுக்கான திருமாங்கல்ய தங்கம் திட்டத்தில் ரூ.1.89 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் ஏழைப்பெண்களுக்கான திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழாவில் 195 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 89 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவி வழங்குகின்ற நிகழ்ச்சியில் வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் பெண் கல்வி, பெண்களின் வேலைவாய்ப்பு, திருமண நிதியுதவி உள்ளிட்டவை என பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
உயர்கல்வி படிக்கின்ற மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருநங்கைகளுக்கான சுயதொழில் மானியம் வழங்கும் திட்டம், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியும் மருத்துவமும் எனது இரு கண்கள் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரசாக திகழ்ந்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக பெண்களின் உயர்வே ! தமிழ்நாடு மாநிலத்தின் உயர்வு! என்ற வகையில் பெண்களின் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் சமூக நலத்துறையின் சார்பில் 195 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 89 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்கள். மேலும், ரூ. 86 இலட்சம் மதிப்பில் நிதியுதவியானது 195 பயனாளிகளின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 149 பயனாளிகள் பட்டம் முடித்தவர்களும், 46 பயனாளிகள் பத்தாம் வகுப்பு படித்தவர்களும் பயனடைவர். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


