தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தொடர்பான இரண்டு பொதுநல மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பொருநை அருங்காட்சியகம அமைந்ததை முன்னிட்டு முடித்து வைத்தது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராசு 2017-ஆம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கில் 2004 ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய அறிக்கை வேண்டும். மீண்டும் இங்கு அகழாய்வு செய்ய வேண்டும், உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். தொடர்ந்து அவர் 2019-ஆம் ஆண்டு மேலும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சிவகளையில் அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. நீதிபதி உத்தரவின் படி மத்திய மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வந்தனர். மத்திய அரசு இந்தியாவிலேயே முதல் முதல் சைட் மியூசியத்தினை ஆதிச்சநல்லூரில் அமைத்தது. மாநில் அரசு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கிடைத்த பொருள்களை பொருநை அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டு பணியை துவக்கி கடந்த 20 ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி மலையில் தமிழக முதல்வர் மு.க,.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதற்கிடையில் இந்த பொதுநலவழக்கு மீண்டும் மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரரின் வழக்கறிஞர் முனைவர் அழகுமணி முன்வைத்த வாதத்தைக் கவனத்தில் கொண்டது. முன்னதாக, இந்திய தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் சுமார் 114 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டது.
இருப்பினும், அகழ்வாராய்ச்சி ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், மாநில அரசு மீதமுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு, பொருநை தொல்லியல் அருங்காட்சியகத்தையும் நிறுவியுள்ளது.
வேலியிடப்பட்ட 114 ஏக்கர் நிலத்தில் தனது அகழ்வாராய்ச்சியை நீட்டிக்க இந்திய தொல்லியல் துறைக்கு மாநில அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மத்திய அரசே நேரடியாகவோ அல்லது மாநில அரசு மூலமாகவோ அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டால், மேலும் சுவாரஸ்யமான பழங்காலப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.
இந்த மனு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியான கண்காணிப்பின் காரணமாக, மாநில அரசால் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு அருங்காட்சியகத்தை நிறுவ முடிந்தது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் மேலும் அகழ்வாராய்ச்சி செய்தால் அதிகப் பொருட்களைக் கண்டறிய உதவும் என்று மாநில அரசு கருதினால், தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தப் பகுதியை அகழ்வாராய்ச்சி செய்ய, இந்திய தொல்லியல் துறைக்குத் தேவையான கோரிக்கையை விடுத்து அனுமதி பெறுவதற்கு மாநில அரசுக்கு எப்போதுமே வாய்ப்பு உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர். மாநில அரசாங்கத்தால் அத்தகைய கோரிக்கை ஏதேனும் வைக்கப்பட்டால், இந்தியத் தொல்லியல் துறை அதை நேர்மறையாகப் பரிசீலித்து, அகழ்வாராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என்று நீதிமன்றம் கூறி, மனுவை முடித்து வைத்தனர்.
சிவகளை சம்பந்தமாக, நீதிமன்றத்தின் உத்தரவின்படி அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். நிபுணர் குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அகழ்வாராய்ச்சி அறிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசாங்கம் நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தி, அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பெருமளவு நிறைவு செய்துள்ளது. தற்போது பொருநை அருங்காட்சியகம் பணி மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது என மனுதாரர் வழக்கறிஞர் முனைவர் அழகுமணி குறிப்பிட்டார்.
இதைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், ஆதிச்சநல்லூர் , சிவகளை மனுவை முடித்து வைத்தது. ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைத்து பராமரிப்பு இன்றி கிடக்கிறது என்ற மனுதாரரின் கோரிக்கையை தனி மனுவாக தாக்கல் செய்யலாம் என ஆலோசனை கூறப்பட்டது.


