கோபாலன் செட்டியார், வாகைக்குளம்
சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் சொக்கலிங்கம் செட்டியார்க்கும் – காந்திமதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு நாட்டு வைத்தியர். 1935ல் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்து காங்கிரஸ் தொண்டர் அணி அமைத்து மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டிவிட்டார். கிராமங்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். 1937ல் தியாகி சத்தியமூர்த்தி தலைமையில் முடிவைத்தானேந்தலில் நடைபெற்ற மாவட்ட அரசியல் மாநாட்டை முன்னின்று நடத்தி வைத்த பெருமை இவருக்குண்டு. 1942ம் ஆண்டு புரட்சி நடைபெற்ற பொழுது முடிவைத்தானேந்தல் தியாகி பேச்சிமுத்து பிள்ளையுடன் இணைந்து 20.08.1942 அன்று இரவு தூத்துக்குடி, பாளையங்கோட்டை செல்லும் தந்திக்கம்பங்களை வெட்டி வீழ்த்தியதால் காவலர்கள் இவரைக் கைது செய்தனர். தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம் கிளைச் சிறைகளில் ஐந்து மாதம் தண்டனை அனுபவித்தார். பின்பு பெல்லாரி (கர்நாடகா) சிறையில் ஒரு வருடம் தண்டனை அனுபவித்தார். சிறையில் ஆங்கில அதிகாரிகள் செய்த கொடுமையால் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். நாட்டு விடுதலைக்குப்பின் 1953ல் திருமணம் செய்து கொண்டார். நான்கு மகன்களும் மூன்று பெண்களும் உள்ளனர். 25.12.1979ல் இயற்கை எய்தினார். மாநில அரசின் ஓய்வூதியம் பெற்றவர். இவரது மறைவுக்குப்பின் இவரது துணைவியார் உதவித் தொகை பெற்றுவந்தார்.


