சாய் பல்லவி செந்தாமரை என்பவர் திரைப்பட நடிகை ஆவார். பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார்.இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது.
சாய் பல்லவி தன்னுடைய தொழில் மூலம் சுகாதாரத் துறையுடன் தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.
தமிழ்நாட்டிலுள்ள கோத்தகிரியில் செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய இளைய சகோதரி பூசா கண்ணன் ஆவார். இவரும் ஒரு திரைப்பட நடிகை ஆவார். சாய் பல்லவி வளர்ந்தது, கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும்.
சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக, இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்நேர நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார். 2009 இல் இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தொடக்கத்தில் சாய் தாம் தூம், கசுத்தூரி மான் போன்ற சில திரைப்படங்களில் தோன்றினார். 2014 ஆம் ஆண்டில் சியார்ச்சியாவிலுள்ள டிப்லிசியில் சாய் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் அல்போன்சு புத்தாரென் தன்னுடைய பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சாய் பல்லவி படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் சாய் பல்லவி மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிவிடுவார். அந்த ஆண்டில் சாய் பல்லவி பிலிம்பேரின் சிறந்த அறிமுக பெண் நடிகை உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
2015 ஆம் ஆண்டில் சாய் பல்லவி தன்னுடைய இரண்டாவது திரைப்படமான கலியில் நடித்தார். இப்படம் 2016 இல் வெளியிடப்பட்டது.
ஒரு கணவனின் பொல்லாத கோபத்திற்கு ஆளாகும் அஞ்சலி என்ற இளம் மனைவியாக சாய் இப்படத்தில் நடித்தார், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதிற்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சேகர் கம்முலாவின் பிடே என்ற திரைப்படத்தில் தெலுங்காணாவிலிருந்து வரும் பானுமதி என்ற சுதந்திரமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இயக்குநர் ஏ.எல். விசயின் கரு என்ற திரைப்படம் இவருக்கு அடுத்த படமாக அமைந்தது. தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
மாரி என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் மாரி 2 என்ற திரைப்படத்தில் தனுசுக்கு எதிரான நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரு மொழித் திரைப்படமாக எடுக்கப்படும் இப்படத்தை பாலாசி மோகன் இயக்குகிறார்.
சமீபத்தில் சாய் பல்லவியின் நடத்தையைப் பற்றி சில வதந்திகள் கூறப்பட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாகவும் தளத்தில் அநாகரிமாக நடந்து கொள்ளுவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் நாகசூரியா தெரிவித்துள்ளார். இப்பேட்டி சாய் பல்லவியின் திரை வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
நாகசூரியாவின் கருத்துக்களை தான் பெரிதும் மதிப்பதாகவும், ஆனால் அந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் பல்லவி தெரிவித்துள்ளார். சர்வானந்த் உடன் படிபடி லெச்ச மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க, 2018 பிப்ரவரியில் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


