தூத்துக்குடியில் செவித்திறன் குறைபாடு கண்டறிதலுக்கான பயிற்சியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்து, செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியினை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் செவித்திறன் குறைபாடு கண்டறிதலுக்கான பயிற்சியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் ஏற்கனவே MERF பவுண்டேசன் முகாம் நடத்தி 150 பேருக்கு உபகரணங்கள் வழங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் செவித்திறன் குறையை கண்டறிந்தால் சரிசெய்துவிட முடியும்.
இன்று இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றக்கூடிய வாய்ப்பு உங்களின் கைகளில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு காது கேட்கவில்லை என்பதை தெரிந்துகொள்வதற்கே பல வருடங்கள் ஆகிறது. காது கேட்காத ஒருவரின் வாழ்க்கையை இந்த பயிற்சி மூலம் மாற்ற முடியும் என்ற உறுதியுடன் செயல்பட்டால் இந்த பயிற்சியை வெற்றிகரமாக மாற்ற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முடியும்.
அடுத்து இதை நாடு முழுவதுமான ஒரு திட்டமாக நாம் மாற்ற முடியும். உங்கள் கைகளில்தான் அடுத்த தலைமுறையினரான இளைஞர்களும், இளம்பெண்களும் காது கேட்காத பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான முயற்சி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது நாட்டில் காது கேளாக குழந்தைகள் பெருமளவில் பிறப்பதற்கு காரணம் சொந்தத்திலேயே திருமணம் செய்வதுதான். இதுகுறித்து கிராமங்களில் மக்களை சந்தித்து விழிப்புணர்வை உங்களால் உருவாக்க முடியும்.
முத்தமிழறிஞர் கலைஞர் 1975ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல்முறையாக காது கேளாத தகுதியை கொண்டு வந்தார்கள். காது கேளாதவர்களுக்கு அரசே சிகிச்சை அளிப்பதற்கான முதல் அரசாணையை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த முகாமில் 21 குழந்தைகளுக்கு காது கேட்காதது கண்டறியப்பட்டு அவர்களுக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தையை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தூத்துக்குடியிலே கல்லூரிக்கு போகக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார்.
MERF பவுண்டேசன் என்பது தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படக்கூடிய ஒரு பவுண்டேசன். இன்று தூத்துக்குடியிலே பயிற்சி நடத்துவதற்கு டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பயிற்சிக்காக உழைத்த மருத்துவர்கள், அரசு அலுவலர்களுக்கு நன்றி என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: தூத்துக்குடி, திருச்செந்தூரில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் முயற்சியால் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ஏற்கனவே ஒரு முகாம் நடைபெற்றது. சென்னையை சேர்ந்த MERF பவுண்டேசன் முகாமில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் இலவசமாக அனைத்து பரிசோதனைகளும் செய்தார்கள். பிறந்த குழந்தைக்குகூட 24 மணி நேரத்தில் செவித்திறன் குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டறியக்கூடிய வசதிகள் இருக்கிறது. குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஒரு முக்கியமான இடம். ஏனென்றால் அங்கு சத்துணவு வழங்கப்படுகிறது.
தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதுபோல செவித்திறன் குறைபாடு உடையவர்களை கண்டறியக்கூடிய முக்கியமான இடமாகவும் அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் முயற்சியால் தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைத்தும் இலவசமாகத்தான் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு செவித்திறனும், பேசும் திறனும்தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. குறைபாடு உடையவர்களை 5 வயதிற்குள் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மற்ற சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கே அனுப்ப முடியும். இல்லையென்றால் சிறப்பு பள்ளிகளுக்குத்தான் செல்ல முடியும். குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு சிறிய அளவு இருந்தால்கூட அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். நீங்கள் பயிற்சியில் சொல்வதை சரியாக உள்வாங்கிக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
MERF பவுண்டேஷன் மருத்துவர்.ரஞ்சித் தெரிவித்ததாவது: காது கேட்காமல் பிறந்த குழந்தைக்கு கூட சரிசெய்வதற்கான அத்தனை வசதிகளும் தமிழ்நாடு அரசால் இலவசமாக செய்யப்படுகிறது. ஆனால் காது கேளாத குழந்தைகளில் ஒரு சதவீதம்தான் சரிசெய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு காது கேட்கவில்லை என்று கண்டுபிடிக்காததுதான் காரணம். இரண்டாவது அதை கண்டுபிடித்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்து வருவதில்லை. அப்படியே வந்தாலும் சிகிச்சை முடிந்த பின்னர் தொடர்ந்து ஆலோசனைகளை பின்பற்றுவது கிடையாது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் காது கேட்காததை சரிசெய்வதற்கான அதிக வசதிகள் இருக்கிறது. காதே இல்லாமல் பிறந்தாலும் சரிசெய்வதற்கான வசதி தமிழ்நாட்டில் இருக்கிறது. பொதுமக்களிடையே காது கேளாமையை கண்டுபிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாமில் காது கேளாதவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது என MERF பவுண்டேஷன் நுNவு மருத்துவர்.ரஞ்சித் தெரிவித்தார்.
முன்னதாக காது கேட்காத 16 பேருக்கு காது கேட்கும் கருவிகளையும், மகளிர் திட்டம் மூலம் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.56 லட்சம் கடனுதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.4,80,055/- மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 3 பேருக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச்சான்றுகளையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வர்யா மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் எஸ்.பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் நலப்பணிகள் தூத்துக்குடி ஏ.விஜயா, மாநகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ், மாற்றுத்திறானிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


