ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவருவதை பாராட்டி திருநெல்வேலி மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசால் கடந்த 25-6-2015ஆம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 22-12-2017ல் திருநெல்வேலி மாநகராட்சியும் தோ்வு செய்யப்பட்டது. அதன்பின்பு இத் திட்டத்தில் மொத்தம் ரூ.965 கோடியில் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 32 திட்டப்பணிகள் ரூ.319.02 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன.
52 திட்டப்பணிகள் ரூ.642.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை செயல்படுத்தி வருவதில் இந்திய அளவில் திருநெல்வேலி மாநகராட்சி மூன்றாமிடத்தை பெற்றுள்ளது. இதையொட்டி மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார துறை அமைச்சம் சாா்பில் சூரத்தில் நடைபெற்ற விழாவில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மாநகராட்சி ஆணையரும், பொலிவுறு நகரம் திட்ட நிா்வாக இயக்குநமான பா.விஷ்ணுசந்திரன் பெற்றுக் கொண்டாா் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


