
மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ். ஜேக்கப் நேற்றிரவு 11 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்திநகர் 21 தெருவில் வசித்துவந்ததார்.
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூக செயற்பாட்டாளர் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். இவர் தூத்துக்குடி அடுத்த ராஜாவின் கோயில் கிராமத்தில் 1926ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தார்.
திருநெல்வேலி அரசு போதனமுறை பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஈராண்டுகள் பயின்றார். தொடர்ந்து சிறுவர் ஊழியராகப் பணிபுரிந்துகொண்டே திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகத்தில் சேர்ந்து பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.
திருநெல்வேலி சதி வழக்கில் கைதான 93 பேரில், ஆர்.எஸ். ஜேக்கப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு கதைகள் எழுதியதோடு அவர்களுக்காகப் போராடிய இவர் “வாத்தியார்” என்ற புதினம் மூலம் பிரபலமானார். அதனாலேயே இவரை “வாத்தியார்” ஜேக்கப் என்று மக்கள் அழைத்தனர்.
இவர் ஊரும்பேரும் என்ற தலைப்பில் மூன்று பாகம் நெல்லை தூத்துககுடி தென்காசி மாவட்ட ஊர் வரலாறுகளை தொகுத்துள்ளார். பலருககு இதுதான் ஊர் வரலாறு எழுத அடித்தனமிட்டது. பனையண்ணன் என்ற இவரது நாவல் பெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளி வந்தது. இந்த நாவலின் கதாநாயகன் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தினை சேர்ந்த காளி என்ற பனையேறும் தொழிலாளி. மேலும் அவர் எழுதிகொண்டே இருந்தார். ஜெயா பப்ளிகேஷன் என்ற பெயரில் அவரது நூல்கள் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக நேற்று (டிசம்பர் 21) இரவு 11 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 96. இன்று மாலை நான்கு மணிக்கு அவரது உடல் பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.