முரசு புயல் எதிரொலியாக தூத்துக்குடி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வங்கக்கடலில் 2-வது புயல் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து நேற்று புயலாகவும் உருவானது. இந்த புயலுக்கு ‘முரசு’ என பெயரிடப்பட்டு இருக்கிறது.
முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முரசு புயல் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


