நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயிண்டினை கனிமொழி எம்பி திறந்து வைத்து குழு செல்பி எடுத்துக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் ஒவ்வொரு முறையும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியுறும் நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அடுத்த முறை மழை பெய்யும்போது இந்த பிரச்சனைகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம். பல இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் சில இடங்களில் முடிவடையாத பணிகளும் விரைவில் முடிக்கப்படும். மீதமுள்ள இடங்களில் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக மாநகராட்சி திரவியரத்தினம் நகர், ராஜீவ்நகர் அருகில் முத்துகிருஷ்ணன்நகர், பால்பாண்டிநகர், 4ம் கேட், சில்வர்புரம், வி.எம்.எஸ்.நகர், ரஹ்மத்நகர் ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஜெயராஜ் நகர் சந்திப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஐ லவ் தூத்துக்குடி’ என்ற செல்பி பாயிண்டினை திறந்து வைத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டம் 2021-2022ன்கீழ் இரண்டு புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நகர அளவிலான ஆலோசனை மன்ற கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள், வணிகர்கள், பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆய்வில், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


