தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பூங்கோயில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 7.15 மணிக்கு கொடிப்பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, காலை 10.45 மணியிலிருந்து 11.10 மணிக்குள் கோவிலின் நந்தீஸ்வரர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ எனப் பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முதல் நாளான இன்று (21.04.2026) இரவு 8 மணிக்கு முக்கிய நிகழ்வாக பூங்கோயில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி சங்கர ராமேஸ்வரர், அம்பாள் பாகம்பிரியாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். 7-ஆம் திருநாளில் சிவப்பு சாத்தி தரிசனம், 8-ஆம் திருநாளில் பச்சை சாத்தி தரிசனம், சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு ரத வீதிகள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.


