முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான தாய் தெய்வமான நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (23-ந்தேதி) நடைபெறுகிறது.
தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்காகப் பாய்வதால் ‘தட்சண கங்கை’ எனப் பெயர் பெற்றது. இதனாலேயே முறப்பநாடு தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது. இது போலவே தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்காகப் பாயும் இடத்தில், முத்தாலங்குறிச்சியில் அருள்பாலிப்பவர் நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் வடக்கு நோக்கி வீற்றிருக்க, வடக்கிலிருந்து ஓடி வரும் தாமிரபரணி அன்னை அடியைத் தழுவிச் செல்வது ஐதீகமாகும். எனவே, இந்த ஆலயம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மிக முக்கிய ஆலயங்களில் ஒன்றாக டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட ஆன்மீக எழுத்தாளர்களால் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நாளை ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பக்த ஜன சபா செய்து வருகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோ பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்குக் கடம் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று (22-ந்தேதி) காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. இரவு எந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெறும்.
மூன்றாம் நாளான நாளை (23-ந்தேதி) காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு யாத்ராதானம் மற்றும் கடம் எழுந்தருளல் நடைபெறும். அதன் பின்னர், 10.15 மணிக்கு மேல் குணவதி அம்மன் திருக்கோவில் விமான கோபுரம் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறும். இரவு 7 மணிக்கு அம்பாள் திருவீதி உலா நடைபெறும். இதற்கான பூஜைகளைச் சிவஸ்ரீ செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஸ்ரீதர், முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் பக்த ஜன சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்



