அழகுமுத்துக்கோன் எட்டயபுரம் குதிரைப்படைத் தளபதியாக இருந்தார். இவர் ஆங்கிலக்கும்பினியை எதிர்த்துப்போர்க் கொடியை உயர்த்தினார். இவருடைய படைகளும் கும்பினியின் மதுரை கவர்னர் கான்சாகியின் படைகளும் பி.பி 1759ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென்பாண்டி நாட்டில் உள்ள பெத்தநாய்க்கலூர்கோட்டையில் மோதின. இந்த மாவீரரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் “வம்சதீபிகை” என்ற பழம்பெரும் வரலாற்று நூலிலும் “ணிttணீஹ்ணீஜீuக்ஷீணீனீ றிணீst ணீஸீபீ றிக்ஷீமீsமீஸீt” என்ற ஆங்கில நூலிலும் இடம் பெற்றுள்ளன. இம்மாவீரர் வாழ்ந்த இல்லம் தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் இருக்கிறது. இம்மாவீரர் சுதந்திரப்போரை நடத்திய பெத்தநாயக்கனூர் கோட்டை தூத்துக்குடி மாவட்டம் ஆத்தங்கரையில் உள்ளது.
எட்டயபுரத்தை ஆண்டு வந்த எட்டயபுரம் பாளையங்காரர் தம்முடைய பாளையம் அருகில் இருந்த பாளையங்களை வென்று தம்முடைய பாளையத்தை விரிவாக்கினார். எட்டயபுரம் பாளையக்காரர் அருகில் இருந்த அருங்குளம், சித்தவநாயக்கன்பட்டி, மாவிலோடை ஆகிய பாளையங்களின் மீது படையெடுத்து அவற்றை எட்டயபுரத்துடன் சேர்த்துக்கொண்டார். சாயமலையைச்சுற்றியுள்ள 15கிராமங்களையும் தம்முடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். எட்டயபுரம் நெல்லைச்சீமையில் ஒரு பெரிய பாளையமாக உருவாக்கப்பட்டது. பாளையம் உருவான பின்னர் கி.பி.1663 ஆம் ஆண்டு மதுரையைச்சேர்ந்த அழகுமுத்துக்கோன் தம் உறவினருடனும், படைகளுடனும் எட்டயபுரம் பாளையம் வந்தார். சிறந்த வீரர்களை ஆதரித்து வந்த எட்டப்பர் அழகுமுத்துக்கோனை ஒரு படைப் பிரிவில் தளபதி ஆக்கினார். அழகுமுத்தும் அவருடைய போர் வீரர்களும் குடியேற கட்டாலங்குளம் மற்றும் கற்றியுள்ள சில கிராமங்களையும் வழங்கினார். அழகுமுத்துவின் சம்பளத்திற்காக 500பொன் வருமானமுள்ள சோழபுரம், வாலம்பட்டி மார்த்தாண்டம்பட்டி, ஆகிய கிராமங்களையும் எட்டப்பர் வழங்கினார்.
எட்டயபுரத்திற்குச் சூரங்குடியில் எதிரிகள் இருந்தார்கள். இவர்களை அடக்குவதற்காக அழகுமுத்துக்கோனின் உறவினரான கெச்சிவண்ணன் தலைமையில் ஒரு படை 1691இல் சூரங்குடிக்கு அனுப்பப்பட்டது. இவர் சூரங்குடி சென்று கோட்டை வாசலில் எதிரி வீரர்களை முறியடித்து கோட்டைக்குள் நுழையும்பொழுது மறைவிலிருந்து எதிரி வீரன் துப்பாக்கியால் சுட்டதால், கெச்சிவண்ணன் இறந்துவிட்டான். கெச்சிவண்ணன் வீரமரணம் அடைந்த செய்தியைக்கேள்விப்பட்ட எட்டப்பர், கெச்சி வண்ணனுக்குச்சந்ததி இல்லாததால் அவர் சகோதரி சின்னக்காள் மகன் அழகுமுத்துவுக்கு குருவிநத்தம், தீத்தாம்பட்டி ஆகிய கிராமங்களை ரத்தமானியமாக வழங்கினார். ஏற்கெனவே மானியமாக வழங்கப்பட்டிருந்த வாலம்பட்டி, மார்த்தாண்டம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கு வரி விலக்கு அளித்தார். அழகுமுத்துக் குடும்பத்தினர் எட்டயபுரத்தில் பரம்பரைத்தளபதிகள் ஆனார்கள். கி.பி.1705 முதல் 1725 வரை எட்டயபுரத்தை ஆண்டு கொண்டிருந்த எட்டப்பர் காலத்தில், இராமநாதபுரத்தின் மீது தஞ்சை மராட்டிய மன்னர் படை எடுத்தார். அனுமந்தக்கோட்டை என்ற இடத்தில் சேதுபதிக்கும் மராட்டிய மன்னருக்கும் இடையே பெரும் போர் நடைபெற்றது. சேதுபதிக்கு உதவி புரிய அழகுமுத்து தலைமையில் 5000 போர் வீரர்களை எட்டப்பர் அனுப்பி வைத்தார். கி.பி. 1725இல் நடைபெற்ற இந்தப் போரில் அழகுமுத்து வீரமரணம் அடைந்தார். இந்தப் போரில் சேதுபதி வெற்றி பெற்றார். அழகுமுத்துக்குமாரர் அழகுமுத்து எட்டயபுரத்தின் தளபதியாகப்பொறுப்பேற்றார். இவர் வழிவந்தவர்தான் கி.பி.1759இல் கும்பினியை எதிர்த்துச் சுதந்திரப் போரை நடத்தி வீரமரணம் அடைந்த அழகுமுத்துக்கோன் ஆவார்.
ஆற்காட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகச் சந்தாசாகிப்புக்கும் அவனுடைய சகோதரன் முகமதுஅலிக்கும் இடையே போர், மூண்டது. இப்போரில் ஆங்கிலேயர்கள் முகமதுஅலிக்கும் போர் பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிப்புக்கும் ஆதரவாகப் போர் புரிந்தார்கள். இப்போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள். முகமது அலி ஆற்காட்டு நவாப் ஆக்கப்பட்டார். முகமது அலியைப் பெயர் அளவிற்கு ஆற்காட்டு நவாப்பாக வைத்துக் கொண்டு ஆற்காட்டு நவாப்பின் ஆட்சி உரிமைகளையும், அதிகார உரிமைகளையும் ஆங்கிலேயர்கள் மேற்கொண்டார்கள். ஆற்காட்டு நவாபைச்சேர்ந்த பாளையங்களுக்குச் சென்று பல வருடங்களாக வசூலிக்கப்படாமல் இருந்த கப்பத்தொகையை வசூலிக்க கானல்ஹெரான் தலைமையில் ஒரு படை திருநெல்வேலிச்சீமைக்குப் புறப்பட்டது. அந்தப் படையில் 500 ஐரோப்பிய வீரர்களும், 2000 சுதேசி வீரர்களும் இருந்தனர். சுதேசிப்படைகளின் தளபதி கம்மாந்தான் கான்சாகிப்பும் கர்னல் ஹெரானோடு அனுப்பி வைக்கப்பட்டான். இந்தப் படையின் முக்கிய நோக்கங்கள் (1) தென்பாண்டி நாட்டுப்பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்வது. (2) கும்பினியின் அதிகாரத்தைத் தென்பாண்டி நாட்டில் நிலை நிறுத்துவது போன்றனவாகும். 1755ஆம் ஆண்டு மார்ச் மாத நடுவில் கர்னல்ஹெரானும், கம்மாந்தான் கான்சாகிப்பும் தமது படைகளுடன் நெல்லைச்சீமையில் உள்ள எல்லைநாயக்கன்பட்டிக்கு வந்து
முகாமிட்டனர். எட்டயபுரத்தை ஆட்சி செய்து வந்த ஜெகவீரஎட்டப்பன் கும்பினிக்குக்கப்பம் செலுத்த மறுத்தார்.கும்பினிக்கு எதிராகப்போர்க்கொடியை உயர்த்தினார்.கும்பினிப்படைகள் எட்டயபுரத்தைத்தாக்கின. கும்பினிப் படைகளின் பிரங்கித்தாக்குதலில் எட்டயபுரம் கோட்டை தகர்ந்த இப்போரில் எட்டயபுரம் தோற்றது. ஜெகவீரஎட்டப்பனும் தளபதி அழகுமுத்துவும் கோட்டையை விட்டு வெளியேறி தங்கள் படைகளுடன் பெருநாளி காட்டுப் பகுதியில் முகாமிட்டார்கள். கி.பி1755இல் எல்லைநாயக்கன்பட்டியில் முகாமிட்டிருந்த ஜெனரல் ஹெரானையும் கான்சாகிப்பையும் சந்தித்து எட்டயபுரம் பாளையம் சார்பாக கப்பம் கட்டுவதற்குத் தவணை கேட்டார். சில ஆட்களைப் பிணைக்கைதிகளாக ஒப்படைத்தார். அவசர அழைப்பு வந்ததால் ஜெனரால் ஹெரானும் கான்சாகிபும் திருச்சி திரும்பினார்கள் பூதலாபுரம் எட்டையாவுக்குப் பாதுகாப்பாகக் கான்சாகிபு தம்முடைய படையில் ஒரு பிரிவினை எட்டயபுரத்தில் நிறுத்திவிட்டுச்சென்றார். பெருநாளி கானகத்திலிருந்த எட்டப்பரும் தளபதி அழகுமுத்துவும் எட்டயபுரத்தை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட முடியாமல் கான்சாகிபின் படை எட்டயபுரத்தைப் பாதுகாத்து வந்தது.
நெல்லைச்சீமையில் 1755இல் படை எடுத்துச்சென்றபோது கப்பத்தைக்கட்டத் தவணை கேட்ட எட்டயபுரம் பாளையக்காரர் தவணைப்படி கப்பத்தைக் கட்டவில்லை. எனவே, கான்காசிபு கி.பி.1759ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி தென்பாண்டி பாளையங்கள் மீது படையெடுத்தார். அந்நிய ஆட்சியை எதிர்த்துப் பெத்தாநாயக்கனூர் கோட்டையில் படைகளுடன் முகாமிட்டிருப்பதைக் குருமலைத்துரையின் அமைச்சர் சிவசங்கரன்பிள்ளை மூலம் தெரிந்து, பெத்தாநாயக்கனூர் கோட்டையை கான்சாகிபு முற்றுகையிட்டார். கான்சாகிப்பின் பீரங்கிகள் கோட்டையை பீரங்கித்தாக்குதலால் நோக்கித் தீப்பிழம்பைக் கக்கின. பீரங்கிகள் குண்டுமாரி பொழிந்தன. கோட்டைச்சுவரில் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளின் வழியாகக் கான்சாகிப்பின் வீரர்கள் கோட்டைக்குள் புகுந்தார்கள். தாயகத்தின் வீரர்களே அந்நியக் கூலிப்பட்டாளத்தை வெட்டி வீழ்த்துங்கள் எனத்தளபதி அழகுமுத்து வீரர்களுக்குக்கட்டளையிட்டார். கான்சாகிப்பின் கூலிப்பட்டாளத்தால் விடுதலைப்படை வீரர்கள் முன்பாகத்தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆனால் கான்சாகிப்பின் பீரங்கிப் படைகளும், துப்பாக்கிப் படைகளும் தீவிரமாகச் செயல்பட்டன. அக்கினிக்குண்டுகள் கோட்டைக்குள் வீசப்பட்டன. எண்ணற்ற வீரர்கள் இரு தரப்பிலும் மாண்டனர். விடுதலைப்படை தோல்வியுற்றது. தளபதி அழகுமுத்துவும் 255 வீரர்களும் கைது செய்யப்பட்டார்கள்: அந்நிய ஆட்சிக்கு எதிராக வாளேந்தியதற்காக 249 வீரர்களின் வலக் கரங்கள் துண்டிக்கப்பட்டன. தளபதி அழகுமுத்து மற்றும் கெச்சிவண்ணன், வெங்கடேஸ்வர எட்டு, முத்தழகு, பரிவாரம் முத்திருளன். லஷ்மணன், தலைக்காட்டுபுரம் மயிலுப்பிள்ளை ஆகிய துணைத்தளபதிகளும் நடுகாட்டுச்சீமை என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பீரங்கி முனையில் கட்டி வைத்துச்சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அந்நிய ஆட்சிக்கு எதிராக விடுதலைப்போரைத் தொடங்கிய இம்மாவீரர்கள் சுதந்திர தேவிக்குக் களப்பலியானார்கள்.


