நாசரேத் அருகே விளையாட்டில் காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை வடக்கூரைச் சேர்ந்தவர் சடைவீரன் மகன் மூக்கன் வயது (37). கூழி தொழிலாளியான இவருக்கு மனைவி இசக்கியம்மாள் மற்றும் சங்கரேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 16ம்தேதி அதே ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் மூக்கன் பங்கேற்று விளையாடினார். அப்போது வயிற்றுப்பகுதியில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வயிற்றுப் பகுதியில் அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து பார்த்தபோது குடலின் உள் பகுதியில் காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை சிகிச்சை பலனின்றி மூக்கன் இறந்து போனார்.
இது குறித்து மூக்கன் அண்ணன் மாரிமுத்து நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ சுப்பிரமணியன் வழக்குபதிந்து கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயமா அல்லது வேறு விபத்தில் உண்டான காயம் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்.