
ஏரல் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள இடையர்காடு கிராமம், சம்படி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஐயப்பன் (42). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (32). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. செல்வநரேஷ் (11), முருகவேல் (9), செல்வ கணேஷ் (6) என மூன்று மகன்கள் உள்ளனர். ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் தகராறு செய்வாராம். இதுபோல் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ரேகா, அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையறிந்த ரேகா தனது மூன்று குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கொலை முயற்சி வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.