தி. வே. கோபாலையர் ஜனவரி 22, 1926 – ஏப்ரல் 1, 2007 ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.
திருப்பனந்தாள் கல்லூரி (1946-1950), திருவையாறு கல்லூரி (1965-1979), பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துப் புதுவை மையம் (1979-2007) முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.தி.வே. கோபாலையரின் பெற்றோர் வேங்கடராம ஐயர், இலக்குமி அம்மாள். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர். கோபாலையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. பள்ளியிறுதி வகுப்பினை கோபாலையர் 1940 இல் நிறைவு செய்தார். 1945 இல் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் தகுதியாக ஆயிரம் உரூபா பரிசு பெற்றார். 1951 இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று இலாசரசு பதக்கம் பெற்றவர். 1953 இல் பண்டிதம் தேறி முதல் தகுதியாக 100 உருபா பரிசு பெற்றவர். பி.ஓ.எல். (சிறப்பு) 1958 இல் முதல் தகுதி பெற்று அரங்கையா செட்டியார் பரிசைப் பெற்றவர். தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர். சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்.15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். (பேராசிரியர் தா.ம. வெள்ளை வாரணம், முனைவர் கு. சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள்). 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் (EFEO) தம் ஆய்வுப்பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை மிகச்சிறப்பாகச் செய்தவர்.தி.வே. கோபாலையர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்ததுடன் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். பல ஊர்களில் தமிழ் நூல்களைச் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அறிமுகம் செய்தவர். பல இதழ்களில், ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தவர். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தம் ஆழ்ந்த புலமையையும் நினைவாற்றலை யும் வெளிப்படுத்திக் கற்றவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியவர்.தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்தவர். இவர் மிகச்சிறந்த பதிப்பாளர் என்பது போல உரைவரையும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 அன்று மாலை ஐந்து மணிக்கு திருச்சி, திருவரங்கத்தில் தம் 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.