தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற் கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வித் திட்டத்தின் கீழ் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 2023-2024 ஆம் ஆண்டிற்கு முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய பாடபுத்தகங்களை 519 மாணவ, மாணவியர்களுக்கு கூடுதல் ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்


