ஒவ்வொரு காலையிலும் பள்ளிக்குள் நுழையும்போது, நான் ஒரு ஆசிரியராகத்தான் செல்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு மாலையும் பள்ளியை விட்டு வெளியே வரும்போது, ஏதோ சிலவற்றை அவர்களால் கற்றுக்கொண்ட மாணவியாகவே திரும்புகிறேன்.
நான் அவர்களுக்கு ஒரு பாடத்தை நடத்தி அதன் கருத்தை விளக்கியிருக்கலாம்.
ஒரு மாணவனின் சந்தேகத்திற்குப் பதில் சொல்லியிருக்கலாம்.
ஒரு குழந்தையின் தவறைத் திருத்தியிருக்கலாம்..
ஆனால், அந்த நாளில் அவர்கள் என்னிடமிருந்து பெற்ற அறிவை விட, நான் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதே அதிகம் என்று நான் நிறைய நாட்கள் உணர்ந்திருக்கிறேன்.
இந்த அனுதின அனுபவ சேமிப்புகளே…எனது ஆசிரியத்துவத்தை அர்த்தமுடையதாக்கிக் கொண்டிருக்கிறது.
மாணவர்கள்தான் என்
********** ஆசிரியர்கள்”.
—
ஒரு நல்ல ஆசிரியராக வாழ்தல் என்பது பாடப்புத்தகத்தில் இருப்பதை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் உள்ள புதுப்புது உலகங்களை அறிந்து கொள்வதும்தான்.
குறிப்பாக என்னைப் போலவே கிராமப்புறச் சூழலில் பணியாற்றும் ஆசிரியருக்கு இந்த உண்மை இன்னும் ஆழமாகப் புரியும்.
என் மாணவர்களின் உலகம் பாடப்புத்தகத்தின் பக்கங்களுக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை. அவர்களின் வீடுகள், குடும்பங்கள், வயல்கள், தெருக்கள், விளையாட்டுகள், கனவுகள், பயங்கள், எதிர்பார்ப்புகள்…. என அவர்களுக்கென்று ஒரு தனி உலகமே அவர்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அவர்களால் அவற்றோடுதான் பள்ளி வளாகத்திற்குள் நுழைய முடியும்.
அந்த அவர்களது உலகிற்குள் ஒரு ஆசிரியராக தன்னைத் தக்க வைத்துக் கொண்டே நுழைந்தால்தான் அவர்களுக்கு ஏற்றக் கல்வியை வழங்க முடியும்.
ஒரு குழந்தை ஒரு புதிய கருத்தைப் புரிந்துகொள்ளும்
கணத்தில் அதன் கண்களில் தோன்றும் வெளிச்சம் எந்தப் பரிசுக்கும் ஈடாகாதது.
அந்த வெளிச்சத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நான் ஒரு ஆசிரியராக மிளிர்ந்திருக்கிறேன்
வகுப்பில் ஒரு மாணவன் கேட்கும் மிகச் சிறிய கேள்வி, நான் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன் என்று நினைத்திருந்த ஒரு விஷயத்தைப் புதிதாகச் சிந்திக்க வைத்திருக்கிறது.
சில குழந்தைகள் செய்யும் தவறுகள்கூட நமக்குள் பொறுமையையும் புதுமையான உளவியல் சிக்கல்களையும் கற்றுத் தருகிறது.
வகுப்பறையில் ஒரு குழந்தையின் திடீர் மௌனம், அவளது சொல்லப்படாத வலிகளைக் கேட்கக் கற்றுத் தருகிறது.
சில நேரங்களில் ஒரு குழந்தையின் சிறிய வெற்றி, நாம் அடைந்த பெரிய வெற்றிகளைவிட
அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.
இப்படித்தான் என் மாணவர்கள் என்னை ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் ஓர் எடுத்துக்காட்டு
—
ஒரு ஆசிரியரின் அறிவு மட்டுமே மாணவர்களை உருவாக்கிவிடுவதில்லை. ஆசிரியரின் ஒவ்வொரு நடத்தையுமே அவர்களை உருவாக்கத்தான் செய்கின்றன.
அறிவாற்றலில் சிறந்து விளங்கும் குழந்தைக்கும், கற்றலில் பின்தங்கியிருக்கும் குழந்தைக்கும் இடையே ஆசிரியரின் பார்வையில் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது.
அதேபோல், பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும் ஆசிரியரின் அன்பிலும் அணுகுமுறையிலும் எந்த வேறுபாட்டையும் உணரக்கூடாது.
ஒரு வகுப்பறையில் ஆசிரியரின் சமத்துவப் பார்வை என்பது வெறும் நல்லொழுக்கக் கருத்தல்ல; அது குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கும் மிகப்பெரிய சக்தி.
வகுப்பறையில் ஒரு குழந்தையை உயர்த்திப் பேசும்போது மற்றொரு குழந்தையைத் தாழ்த்தாமல் இருப்பது…
ஒரு மாணவனின் திறமையைப் பாராட்டும்போது இன்னொருவனின் குறையை அவமானப்படுத்தாமல் இருப்பது…
தவறு செய்த குழந்தையைத் திருத்தும்போதுகூட அதன் தன்மானத்தை காயப்படுத்தாமல் இருப்பது…
இவையே உண்மையான வகுப்பறை சமத்துவத்தின் வெளிப்பாடுகள்.
குழந்தைகளால் ஆசிரியர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அதுவும் உற்றுக் கவனிக்கப்படுகிறார்கள்.
அவர்களிடம் இயல்பாகவே உள்ள பின்பற்றும் ஆற்றல் அவர்களை அறியாமலே அப்படிச் செய்ய வைக்கிறது.
நமது உண்மையான அன்பு அவர்களுக்குள் அன்பை உருவாக்க வேண்டும்.
நமது இரக்கம் அவர்களுக்குள் இரக்கத்தை வளர்க்க வேண்டும்.
நமது தாழ்மை அவர்களுக்குள் பணிவை விதைக்க வேண்டும்.
நமது நேர்மை அவர்களுக்குள் நேர்மையை உருவாக்க வேண்டும்.
நமது சமத்துவப் பார்வை அவர்களுக்குள் எந்த மனிதனையும் தாழ்வாக எண்ணாத மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
ஆசிரியர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் விட, ஆசிரியர் வாழ்ந்து காட்டும் ஒவ்வொரு நொடியும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாடமாகிறது.
*எனது எழுத்துலகமும் ஆசிரியப்
—
பணியும்*
—
ஒரு சிறந்த ஆசிரியரால் மாணவர்களை உற்று கவனிக்காமல் கற்பிக்க முடியாது.
ஒரு நல்ல எழுத்தாளரும் மனிதர்களைக் கவனிக்காமல் எழுத முடியாது.
அதனால்தான் என் ஆசிரியர் வாழ்க்கையும் என் எழுத்து வாழ்க்கையும் இரு வேறு பாதைகள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
வகுப்பறை எனக்கு குழந்தைகளின் இயல்பையும் உளவியல் வாழ்வியலையும் கற்றுக் கொடுத்தது.
எழுத்து இன்னும் ஆழமாக மனித மனங்களைப் புரிந்துகொள்ளச் செய்தது.
நான் கவிதை எழுதும்போது ஒரு உணர்வைத் தேடுகிறேன்.
கட்டுரை எழுதும்போது ஒரு உண்மையைத் தேடுகிறேன்.
வரலாற்றை எழுதும்போது மறைக்கப்பட்ட குரல்களைத் தேடுகிறேன்.
ஆனால் இவை அனைத்திற்கும் அடியில் இருப்பது ஒன்றுதான்….
“மனிதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல்.”
அந்தத் தேடல்தான் என்னை கவிதைகளிலிருந்து கட்டுரைகளுக்கும், அங்கிருந்து வரலாற்றுப் பதிவுகளுக்கும், நாவல் எழுதும் உலகத்திற்கும் அழைத்துச் சென்றது.
பெற்றோர்களும் உளவியல்
************ தாக்கமும்
—
ஒரு குழந்தையின் மனத்தில் ஆசிரியரின் மதிப்பை உருவாக்குவதில் பெற்றோருக்கும் பங்கு உண்டு.
குழந்தையின் ஆளுமையை உருவாக்குவது பள்ளி மட்டும் அல்ல. வீடும் பள்ளியும் இணைந்துதான் அதை உருவாக்குகின்றன.
குழந்தைகளின்மீது ஆசிரியரின் பொறுப்பைப் போலவே பெற்றோரின் பொறுப்பும் முக்கியமானது.
குழந்தைகள் ஆசிரியர்களைப் பற்றி வீட்டில் பேசும்போது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் பெற்றோர் கவனமாக அணுக வேண்டும்.
ஆசிரியரிடம் கருத்து வேறுபாடு இருந்தால், அதை குழந்தையின் முன்னிலையில் ஆசிரியரைத் தரம் தாழ்த்திப் பேசுவதன் மூலம் வெளிப்படுத்தக் கூடாது.
ஆசிரியரை விமர்சிக்கலாம்; ஆனால் குழந்தையின் முன்னிலையில் ஆசிரியரின் மரியாதையை உடைக்கக் கூடாது.
ஆசிரியரிடம் ஏதேனும் குறை இருந்தால், பெற்றோர் அதை ஆசிரியரிடமோ அல்லது பள்ளி நிர்வாகத்திடமோ நேரடியாகப் பேசலாம்.
குழந்தையின் முன்னிலையில் ஆசிரியரை இழிவாக, தரம் தாழ்த்திப் பேசுவது, இறுதியில் அது அந்தக் குழந்தையின் ஆளுமையைதான் பாதிக்கும். அவ்வாறான குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோரையும் மதிக்கத் தவறுவார்கள் என்பதும் உறுதியான உண்மை.
ஒரு குழந்தை தன் ஆசிரியரை மதிக்கக் கற்றுக்கொள்வது, கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுவதற்காக அல்ல.
தன்னை விட வேறுபட்ட மனிதரையும் மதிக்கக் கற்றுக்கொள்வதற்காகவும் தான் என்பதை பெற்றோர்கள் உணர்ந்தாலே குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி சிறப்பானதாக அமைந்துவிடும்.
அதே நேரத்தில், ஆசிரியரும் குழந்தையிடம் மரியாதையை எதிர்பார்க்கும் முன், குழந்தைகளுக்கு மரியாதையாக நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
இதுதான் ஆசிரியரும் பெற்றோரும் இணைந்து உருவாக்க வேண்டிய ஆரோக்கியமான கல்விச் சூழல்.
நாம் விதைப்பது மனிதர்களை
—
ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களை வாழ்த்தும் ஒரு நாள் மட்டுமல்ல.
ஆசிரியராக இருப்பதன் பொறுப்பை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் நாள்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் நாம் எத்தனை பாடங்களை நடத்தினோம் என்பது முக்கியமல்ல.
அந்தக் குழந்தையின் மனதில் நாம் எத்தனை நல்ல எண்ணங்களை விதைத்தோம் என்பதே முக்கியம்.
அறிவை மட்டும் கொடுத்தோமா?
அல்லது கேள்வி கேட்கும் துணிவையும் கொடுத்தோமா?
பாடத்தை மட்டும் கற்றுக்கொடுத்தோமா?
அல்லது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுத்தோமா?
மதிப்பெண்களை மட்டும் எதிர்பார்த்தோமா?
அல்லது அவனுக்குள் இருக்கும் திறமையை நம்பவும் செய்தோமா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் ஒரு ஆசிரியரின் உண்மையான சாதனையே நிறைந்திருக்கிறது.
எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள்….
என்னை எழுதத் தூண்டிய மனிதர்கள்….
என் எழுத்தை வாசித்தவர்கள்….
என் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள்….
என் எழுத்தில் நம்பிக்கை வைத்தவர்கள்….
எல்லாவற்றுக்கும் மேலாக
என் மாணவர்கள்……
அவர்கள் இல்லாமல் என் ஆசிரியர் வாழ்க்கை முழுமையடையாது.
அவர்கள் இல்லாமல் என் எழுத்து உலகமும் இவ்வளவு உயிரோட்டமாக இருந்திருக்காது.
ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்படும் சமூகமே மிகச் சிறந்த சமூகமாக முடியும்.
இந்த நல்ல நாளில் என்னை உருவாக்கிய ஆசிரியர்களையும் ,
மாணவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
_ முனைவர் த.ஜான்சி பால்ராஜ்
எழுத்தாளர், ஆசிரியர்.
திருநெல்வேலி.


