தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்றலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் இன்று கலந்துரையாடினேன். தமிழ்நாடு அரசினால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான வசதிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது குறைகள் தொடர்பாக தொழிலாளர் நலத்துறையில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்களிடம் கலந்துரையாடினேன். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் உடனடியாக தீர்வு காணப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நமது மாநிலத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலும் அனல்மின் நிலையம், துறைமுகம், விமான நிலையம் என பல்வேறு இடங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் நமது மாநிலத்தின் வளர்ச்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை. வெளிமாநில தொழிலாளர்களுடன் இங்குள்ளவர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினை தொடர்பு கொள்ளலாம். தொழிலாளர் நலத்துறையினர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தமிழகம் முழுவதும் மீன்வளத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைக்குளம், குலசேகரப்பட்டிணம், பெரியதாழை ஆகிய 3 இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதளத்தினை இன்று பார்வையிட்டேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மீன் வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களும் அமலிநகர் பகுதியில் ரூ.58 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்கள்.
இருந்தபோதிலும், தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தூண்டில் வளைவு தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிந்தவுடன் பணிகள் தொடங்கப்படும். இதுதொடர்பாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் இப்பகுதியில் 2 மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளும் மே 31க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


