திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் இணைக்கோயிலான அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும் வண்ண மலர்களால் அழகிய அலங்காரமும் செய்யப்பட்டன.
கோயிலிலிருந்து புறப்பட்ட திருவிழாக் கொடிப்பட்டம், ரதவீதிகள் மற்றும் மாடவீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது.காலை 7.32 மணிக்கு காப்புக் கட்டிய பொன் ஜெயராம் வல்லவராயர் கொடிமரத்தில் திருவிழாக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டு காலை 8.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் வெயிலுகந்தம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோயில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், திருவிழாப் பிரிவு ஆறுமுகராஜ், மணியம் நெல்லையப்பன், ஜெகன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஆ. அருணாசலம், துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.


