தூத்துக்குடி தெப்பகுளம் சுற்றுச் சுவர் சீரமைப்பு பணிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று எம்பவர் இந்தியா – நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் பழமையான சிவன் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தின் சுற்றுச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆனால், இப்பணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவமின்றி நடைபெறுகிறது. மேலும், இங்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. சாலை தடுப்புகள் மற்றும் பாதுபாப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை. அந்த பகுதியில் மின்கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன.
இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்களும் பொதுமக்களும் விபத்துக்குள்ளாகி உயிர்ப்பலி ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இந்த நிலையில், நான் அந்த வழியே செல்லும் எனது காரின் முன்புற டயர் வெடித்து விபத்துக்குள்ளாகிவிட்டது. இதனால் எனக்கு ரூ.10ஆயிரம் செலவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பொறுப்பில்லாமல் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செயல்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


