தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் துறை அறிவிப்புகளுக்கு தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், பட்டினமருதூர், பனையூர் கள ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழர்களின் தொன்மை, கடல்சார் வரலாறு மற்றும் மரபுகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர், துறை சார்ந்த அமைச்சர், தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி மனமார்ந்த நன்றிகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார்.
வரவேற்கத்தக்க முக்கிய அரசு அறிவிப்புகள்:
தமிழகக் கடலோரத் தொன்மையை மீட்டெடுக்கும் ஆழ்கடல் மற்றும் கள ஆய்வுக்கான நிதி ரூ. 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது கள ஆய்வாளர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
பண்டைய தமிழர்களின் துறைமுகங்கள், கடல்சார் வணிகத் தொடர்புகள் மற்றும் ஆற்றங்கரை நாகரிகங்களை ஆவணப்படுத்த ரூ. 3 கோடியில் கள ஆய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருட்களைத் துல்லியமாக அறிவியல் பகுப்பாய்வு செய்ய தமிழகத்திலேயே ரூ. 2 கோடியில் நவீன ஆய்வகம் அமையவுள்ளது.
பூம்புகாரில் ஆழ்கடல் அகழாய்வு தொடர்வதும், அரசு நிகழ்வுகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 30–40 நிமிடங்கள் கட்டாய வாய்ப்பளிக்கும் அரசாணையும் பாராட்டுக்குரியவை.
தூத்துக்குடி மாவட்டத்திற்கான பரிந்துரைகள்:
தமிழ்நாட்டின் கடல்சார் வரலாற்றில் மன்னார் வளைகுடா பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதால், கீழ்க்கண்ட களங்களை முன்னுரிமைப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, பட்டினமருதூர் பகுதி, அதைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இடைப்பட்ட தொடர் மணல் திட்டுகளில் கடல்சார் நீரடி அகழ்வாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டினமருதூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாறுபட்ட தொல்லியல் களங்கள் மற்றும் புதைமேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், இப்பகுதியைத் ‘தொல்லியல் மண்டலமாக’ அறிவித்து அகழாய்வை விரிவுபடுத்த வேண்டும்.
விளாத்திகுளம் வட்டம் பனையூர் பகுதியில் காணப்படும் சுமார் 8,000 முதல் 12,000 ஆண்டுகள் பழமையான கடல்சார் புதைபடிமங்கள் மற்றும் பாறைப்படிமப் பகுதிகளைத் தொல்லியல் தளமாக அறிவிக்க வேண்டும். அங்கு விரிவான தொல்லியல் மற்றும் உயிரியல் அகழ்வாய்வுகள் நடத்தி, பண்டைய தமிழர்களின் கடல் மட்டம் பற்றிய அறிவியல் கோட்பாடுகளை உலகிற்கு உணர்த்த வேண்டும்.
இராபர்ட் ஓரம் 1778-இல் வரைந்த வரைபடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை தரவுகளின் அடிப்படையில், பண்டைய குடியிருப்புகள், கோட்டைகள் மற்றும் நீர்வழித்தட மாற்றங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
பண்டைத் தமிழரின் நிலவியல், முத்து வணிகம் மற்றும் புவியியல் தொன்மங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் கள ஒத்துழைப்பு நல்கத் தயாராக இருப்பதாகத் தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்


