திருக்குறுங்குடியில் சங்கலிபூத்தாருக்கும் , கோயில் பூசாரிக்கும் மந்திரத்தினால் சண்டை நடந்தாகவும் வில்லுப்பாட்டு கலைஞர்கள் பாடுவார்கள்.
கோயில் பூசாரி தனது மகனை சங்கலி பூதத்தார் பிய்த்து எரிந்த காரணத்தினால் அவரை கட்டி குகையில் அடைக்க தனது மந்திரத்தினை உபயோகப்படுத்தினார். . அப்போது பூதத்தார் கோபத்துடன் அங்கிருந்து தாமிரபரணி கரைக்கு கிளம்பினார்.
அதற்கு ஆதாரமாக ஆலயத்தின் அணையா விளக்கு அணைந்திருக்கும், மேலும் கோயில் விருட்சமான மருதமரத்தின் வலது பக்கத்தையும் மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக் கற்களையும் சிதைத்து சரித்து செல்வேன். அடையாளத்தை வந்து சரி பார்த்து கொள் என்று அங்கிருந்து கிளம்பி பூதத்தான் குடியிருப்பை தாண்டி களக்காடு மலை தாண்டி தென்பொதிகை மலை ஏறி காரையாற்றங்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு மகாலிங்க சுவாமிகள் அனுமதியோடு மணி முழுங்கி மரத்தடியில் வந்து குடியேறினார்.
திருக்குறுங்குடியில் பூதத்தாரால் சிதைக்கப்பட்ட மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக் கற்களை பல கால கட்டங்களில் சீரமைக்க முயற்சி செய்தும் இயலவில்லை. பூத்தாருக்கு பிடித்த ஆழமான கசம் தாமிரபரணிகரையிலும் உள்ளது.
சிங்கம்பட்டி பூதத்தார் என கூறப்படும் வட்டாரம் காத்தான் சாமி கோயில் பற்றி இவ்விடத்தில் சிறப்பாக பதிவிடுவது நன்று. இதற்காக நான் தினகரன் ஆன்மிக மலரில் எழுதிய ஜமீன் கோயில்கள் என்ற தொடரில் பயணம் செய்து எழுதினேன். அந்த தொடர் தினகரன் சூரியன் பதிப்பகம் மூலமாக நூலாக வெளியிடப்பட்டுள்ளது (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு).
வட்டார மக்களை காக்கும் தெய்வமாக பூதத்தார் கோயிலை கருதுகிறார்கள். இந்த ஆலயத்தினை ஜமீன்தார்கள் தங்களின் கண்ணின் இமை போல நினைத்து வணங்குகிறார்கள்.
இந்த வட்டார குடி மக்களை காப்பாற்றும் தெய்வத்தினை, தங்கள் மார்பிலும் , நெஞ்சிலும் தாங்கி கொள்கிறார்கள்.
ஜமீன்தார்கள். தாங்கள் செல்வச்செழிப்போடு வாழ்தாலும் கூட, பூதத்தார் தெய்வத்திற்காக தங்கள் உடலை வருத்தியும், பல கீலோ மீட்டர் காடுமோடாக சென்று தன்னந்தனியாக நடந்து சங்கிலியை எடுத்து வரும் வைபவத்தினை நடத்தி வந்தனர்.
மாசி மாதம் சிவராத்திரி அன்று மூன்று நாள் இந்த கோயிலுக்கு விசேஷம் நடைபெறும். அயன் சிங்கம்பட்டியில் உள்ள இந்த கோயில், முழுவதுமாக மண்பூடம் அமைக்கப்பட்டிருக்கும். மழையில் கரைந்தாலும் மாசி மாதம் தான் பூதத்தாருக்கு பூடம் கட்டப்படும். இங்குதான் ஜமீன்தார் முன்னோர்கள், சங்கிலியை எடுத்து பூதத்தாரின் முன்பு மெய்மறந்து தங்கள் மார்பிலும் முதுகிலும் அடித்துக் கொள்வார்கள். கோயில் விழாவிற்கு மட்டுமே கொண்டு வரப்படும் இந்த சங்கலி சொரிமுத்து அய்யனார் கோயிலில்தான் ஆண்டு முழுவதும் வைக்கப்பட்டிருக்கும்
பூதத்தாரின் சங்கிலியை எடுக்க சிங்கம்பட்டியில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு ராஜாவே தன்னந்தனியாக காட்டுக்குள் சுமார் 4 மணி நேரம் நடந்துசென்று சங்கிலியை எடுத்து வருவார்.
இந்த மலை பாதை மணிமுத்தாறு அணையில் இடது புறமாக செல்கிறது. பழங்காலத்தில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு ஜமீன்தார் மற்றும் மக்கள் செல்லும் பாதையே இது தான். வனத்துறை கட்டுபாடு, 1992ல் நடந்த புயல் வெள்ளம் இதனால் இந்த பாதையை இயற்கை புரட்டி போட்டு விட்டது. எனவே தற்போது சொரிமுத்து அய்யனாருக்கு செல்லும் பாதை பாபநாசம் வழியாக மாறிவிட்டது. ஆனாலும் வருடந்தோறும் பூதத்தாருக்கு சங்கிலி எடுக்கபோகும் சாமியாடி இந்த வழியாகத்தான் தனியாக சென்று வருவார். சிறுத்தை, காட்டெருமை, யானை போன்ற கொடிய விலங்குகள் இந்த பகுதியில் உண்டு. தற்போது மணிமுத்தாறு அணை கட்டியிருக்கும் இடம் வழியாக உள்ள மாட்டு வண்டி தடத்தில் அவர் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வார். பின் அங்கிருந்து சங்கிலியை எடுத்து வருவார். சுமார் மூன்று தலை முறைக்கு முன்னால் வரை ஜமீன்தார்கள் தங்கள் உடலை வருத்தி தெய்வத்திற்காக பாடு பட்டுள்ளனர். தற்போது இந்த பகுதியில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு விட்டது.
இந்த அணைக் கட்டிய பிறகு இந்த வழியே செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, முற்றிலுமாக பாதையில் செல்பவர்கள் நிறுத்தப்பட்டு விட்டனர்.
ஜமீன்தார்களும் தற்போது சங்கிலி எடுக்க செல்வது நின்று விட்டது. ஜமீன்தாருக்கு பதில் ஊர் பெரியவர் ஒருவர் சங்கிலி எடுக்க செல்கிறார். எந்த கட்டுபாடு வந்தாலும் இவரை மட்டும் இந்த வழியாக செல்ல அனுமதிக்கின்றனர்.
சங்கிலி எடுக்கபோகும் பக்தர் அதிகாலையில் எழுந்து காட்டு வழியாக நடந்து சொரிமுத்து அய்யனார்கோயிலுக்கு சென்று விடுவார். இவர் கோயிலுக்குள் வந்து விட்டால், அன்று வேறு எந்த பக்தர்களையும் கோயிலுக்கு வர விடாமல் பாலத்திலேயே நிறுத்தி வைத்து விடுவார்கள். இவர் தாமிரபரணியில் குளிப்பார். பின் சிறிது நேரம் ஓய்வெடுப்பார். அந்த சமயத்தில் பூஜைக்கு தேவையான பொருள்களை பூசாரிகள் வைத்து விட்டு, அவர் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்வார்கள்.
அவர் 2 மணி அளவில் தீடீரென்று எழுந்து, மீண்டும் நதியில் குளித்து விட்டு, பூதத்தாருக்கு பூஜை செய்து, அங்கிருக்கும் சங்கிலியை எடுத்து தோளில்போட்டு கொண்டு காட்டு வழியாக ஊளையிட்ட படி வருவார். அதன்பிறகே பாலத்துக்கு அடுத்த பக்கம் இருக்கும் பக்தர்கள் சாமி கும்பிட வருவார்கள்.
இவர் சிங்கம்பட்டிக்கு கரு கருவென்று இருட்டும் சமயம் வந்து சேருவார். அதற்குள் மேலசங்கிலி (ஜமீன்சிங்கம்பட்டி) மக்கள் அகத்தியர் கோயில் அருகே வந்து கோயிலுக்கு பொருள்களையெல்லாம் தூக்கி பத்திரமாக கழுவி வைத்துக்கொள்வார்கள். சங்கிலி கொண்டு வரும் பெரியவர் கண்ணில் படாமல் ஒளிந்து இருப்பார்கள். அவர் அந்த இடத்தினை தாண்டியவுடன் , சீர் வரிசை பொருள்களுடன் பின்னால் கிளம்புவார்கள். கீழ சங்கிலி (அயன் சிங்கம்பட்டி) மக்கள் வேறொரு இடத்தில் 21 குடத்தில் தீர்த்தம் எடுத்து சாமி வரும் வரை ஒளிந்து இருப்பார்கள். பெரியவர் அந்த இடத்தினை விட்டு கடந்த பிறகு பின்னால் குலவை போட்டபடி வருவார்கள். கோட்டைக்குள் சாமி நுழையும் போது, கீழ சங்கிலி, மேல சங்கலி மக்களும் சந்தித்து கோயிக்குள் நுழைவார்கள்.
சங்கிலியை சங்கலி பூதத்தார் முன்னாள் வைத்துவிடுவர். அதன்பிறகு சிங்கம் பட்டி ஜமீன்தார் வந்து சங்கிலியை தலைமை காரரிடம் கொடுக்க அவர் சங்கலியை தன் மார்பிலும், முதுகிலும் அடித்து வழிபடுவார்.
சங்கிலியை எடுத்து தங்கள் மீது அடித்த வருத்திக்கொள்ளும் தலைமை காரர் குடும்பத்தாருக்கு ஜமீன்தார், வீடு, மனை, நிலபுலன்களை எழுதி வைத்துள்ளார்.
இந்த வட்டார காத்தான் என்னும் பூதத்தார் சாதரணமானவர் அல்ல. சுமார் 21 அடி உயரம் கொண்டவர். சுற்றியுள்ள 21 பரிவார தேவதைகள் பூடமும் மண் பூடம் தான். கோயில் கொடையில்தான் மண்ணை பூசி சரி செய்வார்கள். ஏணி வைத்து தான் பூ மாலை சாத்துவார்கள். இவருக்கு பட்டு கட்ட அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரத்தில் பட்டு துணி கிடைக்காது. திருநெல்வேலி சென்று தான் வாங்க வேண்டும்.
இந்த கோயிலில் மற்றுமொரு சிறப்பு நேர்ச்சை. கோயிலுக்கு பக்தர்கள் நேர்ச்சையாக 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கதலி வாழைதார் கொண்டு வந்து படைப்பார்கள். இந்த வாழை தார்களை பந்தலில் கட்டி வைத்திருப்பார்கள். அப்போது பந்தல் கீழே சரிந்து விழும் அளவுக்கு பாரம் தாங்காமல் சாய்ந்து விடும்.
மூன்றாம் நாள் விழா ஜமீன்தார் கோயிலுக்கு பரிவாரங்களுடன் வருவார். அப்போது அரசு அதிகாரிகளையும் சிறப்பு அழைப்பாளராக கூட்டிக் கொண்டு வருவார். அந்த சமயத்தில் ஜமீன்தாருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கொடுத்து விட்டு, அவரோடு வந்த அனைவரும் கௌரவிக்கப்படுவர். அதன் பிறகே பக்தர்களுக்கு அருள் வழங்கப்படும். அவரை புகழ்ந்து “ஏழு கடல் சீமை ஆள வந்த நேர்மை எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா” என பாடல்கள் ஒலிக்கப்படும். ராஜா கிளம்பும் வரை இந்த பாடலை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சங்கிலி பூதத்தார் அரசாட்சி தாமிரபரணி கரையில் இருக்கும் அதே வேளையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல நூறு ஆண்டுகளுககு முன்பே சாதி மறுப்பு திருமணம் ஒன்று நடந்துள்ளது. அதனால் பல ஆச்சரியங்களும் நடந்துள்ளது. அதைப்பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
(பொருநை ரகசியத்தினை தேடிபயணிப்போம்)


