தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமாக இருந்த 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் 3 தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


