“உனக்கு இந்த ஒரே ஒரு வேலைதானே, இந்த வயதில்
ஏன் இப்படிப் படிக்காமல் நேரத்தை வீணடிக்கிறாய்?” என்று குழந்தைகளிடம் அடிக்கடி கேட்டு நாமும் ,குழந்தைகளும் சலித்துப் போயிருப்போம்.
ஆனால் படித்தல் என்ற அந்த ஒரு வேலைதான் குழந்தைப்பருவத்தில் மனத்திற்கு மிகவும் கடினமான ஒன்று என்பதை நாம் உணர்வதே இல்லை.
பெற்றோர்களே, உங்களிடம் ஏதோ ஒரு நாவலையோ, கதை புத்தகத்தையோ அல்லது வேறு ஏதாகிலும் ஒரு புத்தகத்தையோ கொடுத்து *இதனை மனப்பாடம்கூட செய்ய வேண்டாம் , ஒரே ஒருமுறை வாசித்து முடியுங்கள் பார்க்கலாம்” என்று பணித்தால் நம்மில் எத்தனைப் பேர், உடனே வாசித்து விடுவோம் என்று நினைக்கின்றீர்கள்?
பெரும்பாலும் ஏதோ சில காரணங்களால் பிடித்தமான நூல்களை மட்டுமே கருத்தூன்றி வாசிக்க முடியும் .சில நூல்களை எத்தனை நாட்கள் ஆனாலும் வாசிக்க மறுக்கும் மனம்.
அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.அந்த நூல் எழுதபட்ட நடை, அதன் கட்டமைப்பு, உட்பொருள், காலச்சூழல் ….என்று ஏதோ ஒன்று வாசகனால் ஏற்கத் தக்கதாக இல்லாமல் இருக்கலாம்.
வேண்டுமென்றால் ஏதாகிலும் ஒரு நூலை எந்த நோக்கமும் இன்றி வாசிக்க முயன்று பாருங்கள். நிச்சயமாக எளிதாக அது முடியாது.ஒருசில வாசிப்புப் பிரியர்களானவர்கள் மட்டுமே அதற்கு விதிவிலக்கு.
நான் மிகச் சிறந்த நூல்களென விமர்சிக்கப்பட்ட சில நூல்களைக்கூட ஆவலோடு வாங்கி வந்தும், நான்கைந்து பக்கங்களுக்குமேல் வாசிக்கவே முடியாமல் அலமாரியில் ஓரமாக தூக்கி வைத்ததும் உண்டு.
ஏதாவது ஒரு நோக்கத்திற்காக அல்லது தேவைக்காகப் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும் போதுதான் நம்மால் அதை வாசிக்க முடிகிறது.அது போலத்தான் பாடப் புத்தகங்களும்.
மாணவர்கள் படிக்கும் மனநிலையில் இல்லாதபோது அவர்களைப் படிக்கத் தூண்டுவது அவர்களை வெறுப்படைய வைக்கும் செயல்.இந்நிலையில் எல்லா பாடங்களையும் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயச் சூழலில் மாணவர்களால் எளிதாக முழுவதும் படிக்க இயலாமல் போகிறது. அவர்கள் அதைப் பெரும் சுமையாக உணர வேண்டியதாகின்றது.
மனங்களின் பின்னணியம்
************
தனித்தாள் வேற்றுமையோடு காணப்படும் மாணவர்களின் மன இயல்புகளை நாம் அறிந்திருத்தல் அவசியமானது.
ஒவ்வொரு மாணவனும் வேறுபட்ட குடும்பச்சூழல், மரபுவழி நடத்தை மாற்றங்கள், புரிதல் திறனிலுள்ள ஏற்றத் தாழ்வு, மொழியறிவு மற்றும் கணித அறிவுத் திறன் வளர்ச்சியில் காணப்படும் வேறுபாடுகள் முதலியன ஒரு மாணவனின் கற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. எனவே ஒவ்வொரு பாடப் பிரிவும்(Subject) குழந்தைகளுக்குத் தனித்தனியான அறிவுச் சார்ந்த பிரச்சனைகளாகவே உள்ளது.
ஆனால் இவையெதையும் கருத்தில் கொள்ளாமல்
குழந்தைகளைப் “படி, படி” என்று பெற்றோரும், ஆசிரியர்களும் கூறுவது அவர்களுக்கு அது தொந்தரவாகவே தெரிவதில் வியப்பில்லை என்பேன்.நமது இந்த விரட்டலுக்கு கல்வியின் முக்கியத்துவமும், அவசியமும் நமது மனத்தில் ஆழப்பதிந்து போனதே காரணம்.
சலிப்பு தன்மை
*******
இன்றைய குழந்தைகள் கிட்டத்தட்ட பேசத் தொடங்கியதிலிருந்தே படி ,படி என்ற இந்தக் கட்டளையைக் காதில் கேட்கத் தொடங்கிவிடுகின்றனர்.
அவர்களது பிஞ்சு விரல்கள் வலுபெறும்முன்னரே எழுதும் கோல்களைப் பிடித்துக் கட்டாயமாக எழுதப் பழக்குவிக்கப்படுகின்றனர்.
ஒரே கட்டளையை ஓயாமல் கேட்பது எத்தனைச் சலிப்பானதென்று எப்போதாவது நாம் உணர்ந்திருக்கின்றோமா?
அதனால்தான் பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களால்
படிக்கப் பணிக்கப்படும் போது மகிழ்ச்சியாக அதை ஏற்பதில்லை. கட்டாயத்தின் பேரில் செய்கின்றனர். எப்போது வகுப்பறை அல்லது பள்ளியை விட்டு வெளியேறலாம் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர்.
இதனால் கற்பது அவர்களது நினைவில் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை.
பெரும்பாலான மாணவர்கள் “எப்படிப் படித்தாலும்,எதைப் படித்தாலும் மறந்துவிடுகிறது” என்று கூறுவதும் இந்தச் சலிப்பான மனநிலையின் வெளிப்பாடுதான்.
மேற்கொள்ளும் இடர்பாடுகள்
************
இன்றைய திறன்பேசி பயன்பாடு மாணவ பருவத்தினரிடையே
கட்டுப்படுத்த இயலாத அளவில்
அதிகரித்துவிட்ட நிலையில்
சமூக ஊடகங்கள் மற்றும் கணினிவழி விளையாட்டுகள் போன்றனவற்றின் இடையூறுகள் கற்றலில் பெரும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அதை நெறிபடுத்த முதலில் பெற்றோர்கள் அறிந்திருத்தல் அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளின் திறன்பேசி மற்றும் கணினிவழி பொழுதுபோக்குகளில் செலவிடும் நேர அளவை நிர்ணயிக்க வேண்டும்.
“அதெல்லாம் இனி முடியாது” என்ற பதில் பெற்றோர்களது முயலாமையையே குறிக்கும்.அவை குழந்தைகளின் எதிர்காலத்தை மிக மோசமான விதத்தில் பாதிக்கும் என்பதை அறிந்தால் முயன்று வெல்ல முடியும். அறிதலும், விழிப்பு நிலையுமே இன்றைய சமூக உயிர்ப்பின் அடிநாதம்.
கற்றலில் எதிற்மறையான பாதிப்பை ஏற்படுத்துபவற்றை அறிந்து சரியான அறிவுரை வழங்கி சீர்படுத்தினால் மட்டுமே கற்றல்திறன் மேம்படும்.
சமூக ஊடகங்களின் வழியாகவே கற்றலின் அவசியத்தையும் ஊடகங்களின் மனபாதிப்பையும் குழந்தைகளுக்கு எளிதாக அறிய வைக்க முடியும்.இதில் ஆசிரியர்களைவிட பெற்றோரின் பங்களிப்பு அதிகம் தேவை.
அதுசார்ந்த காணொலிகளை பெற்றோர்கள் தங்களது கண்காணிப்பில்
அவர்களைக் கவனிக்க வைக்க வைத்து புரிய வைக்கலாம்.
ஆனால் இது ஓரிரு நாட்களில் சாத்தியமானதல்ல.தொடர்ந்து அவ்வப்போது ஏற்றத் தருணங்களில் குழந்தைகளுக்குள் புகுத்தப்பட வேண்டிய விழிப்புணர்வு.
படித்தலும் கற்றலும்
*********
படித்தல் என்பது வேறு, கற்றல் என்பது வேறு.
‘புரிகின்றதோ இல்லையோ மனப்பாடம் செய்ய வேண்டும்’ என்பது கல்விச் செயல்பாட்டின் விரும்பத்தகாத ஒரு முக்கிய பகுதி.
மதிப்பெண்களையே நோக்கமாக கொண்டு கற்பிக்கப்படும் கற்றல் கற்பித்தல் செயல்முறையில் மனப்பாடம் செய்தலே ‘படித்தல்’ என்னும் தவறான பொருள்படுகின்றது.
இன்றைய கல்விமுறையில் அச்செயல்முறை மாற்றப்படுவதற்கான நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதும் உண்மைதான்.
ஆனாலும் மதிப்பெண்களே மேற்படிப்பிற்கான அடிப்படை மதிப்பீடாக இருந்துவரும் நிலையில் அதற்கான அவசியம் இருந்துகொண்டே தான் இருக்கமுடியும்.
மனப்பாடம் செய்யப்படுதல் என்பது ஒரு விசயத்தைப் புரிந்து அதை மனத்தில் பதித்தல் என்னும் உண்மை நிலையிலிருந்து பெரும்பாலும் விலகியே இருந்துவருகிறது.
பண்டையக் கல்வி முறையில் மனனம் செய்யும் முறையே அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் அக்கல்விமுறையில் இருந்து வந்தது.
செய்யுள் வடிவிலான இலக்கண இலக்கியங்களை
உருபோட இயலாதவர்கள் கற்க தகுதியற்றோர்களாயினர்.அன்று
எல்லோருமே செய்யுள்களைப் புரிதலோடு கற்றார்கள் என்றெல்லாம்
கூறிவிட முடியாது.ஆனால் நன்றாக மனப்பாடம் செய்தனர்.இதனால் மனப்பாடம் செய்யும் சக்தி வழிவழியாக இயற்கையாகவே அதிகரித்து வந்தது.
பாட நூல்களும் ,
எழுது பொருட்களும் மிக மிகக் குறைவான அளவே பயன்பாட்டிலிருந்த அக்காலகட்டத்தில் அதுவே சிறந்த கற்றல் முறையாக இருந்தமை ஏற்புடையதானது. ஆனால் இன்று அந்நிலை இல்லை. எனவே அதற்கான தேவையும் முடிவுற்றது.
திறன் தேர்வுகள்
********
மனப்பாடம் செய்யும் திறன் பெற்றவர்களால் இன்றும் தகுதித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடிகிறதைப் பார்க்க முடிகிறது.
ஆனாலும் அவர்கள் மனப்பாடம் செய்யும் திறன் குறைந்தோரைவிட அறிவில் சிறந்தோர் என்பது முற்றிலும் தவறான மதிப்பீடு.
அனைத்து வகையான தொழிற்சார் படிப்பிற்கும் தேவையான தகுதித் தேர்வுகளைக் கணக்கில் வைத்தே கல்விக் கொள்கைகளை வடிவமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறந்த கொள்கைகளும் இத்தகைய
நடைமுறை சிக்கல்களால் மாற்றங்காண வேண்டியதாகி விடுகிறது என்பதே உண்மை.
திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்யப்படும் எந்த ஒன்றும் ஆழ்மனத்திற்குள் செல்கிறது. இதில் புரிதலே இன்றி மனப்பாடம் செய்யப்படுபவை மறக்கடிக்கப்படுவது இயல்பு.இன்னொன்று புரதலுடனான கற்றலில் மனப்பாடம் செய்தல் என்பது கடினமான வேலையாக தோன்றாது என்பது மனவியல்ரீதியான உண்மை.
புரிதலே சிறந்த கற்றல் ;புரிதலற்ற மனப்பாடம் அல்ல.
பாடப்பொருள் புரியாமல் மனதில் பதியுமா என்றால்… பதியும். “ஆத்திச் சூடி, அறம் செய்ய விரும்பு…. மற்றும் ஒன்றிரண்டு திருக்குறள்கள் போன்ற பழங்கால செய்யுள்களாலான மனப்பாட பகுதிகள் அனைத்தும் பொருள் புரிந்தா நமது மனத்தில் பதிந்திருக்கின்றன!? இல்லையே…!
எனவே புரிதலுக்கு, விரும்பி கற்றல் என்பதே அவசியம்.வெறுமனே மனப்பாடம் செய்வதற்குத் திரும்பத் திரும்ப உரு போட தெரிந்தாலே போதுமானது.
தேர்வும் உடனடி வாசிப்பும்
************
தேர்விற்கான படித்தல் என்னும் நிலை குறுகிய கால நினைவில் நிறுத்தும் வகையில் கற்கும் ஒருவித மனநிலை.இது தேர்வு முடிந்ததும், கற்றவை நினைவில் இராது.மிகக் குறுகிய காலத்தில்
மறக்கடிக்கப்பட்டுவிடும்.
பெரும்பாலான கல்லூரி மாணவர்களையோ தொலைதூரக் கல்வி நிலையங்களில் கற்றுத் தேரும் மாணவர்களையோ கேட்டுப்பாருங்கள்.’தேர்விற்கு ஒருவாரத்திற்கு முன்பு படிப்பதுதான் நினைவில் நிற்கும்.அப்போது தான் சரியாக எழுத முடியும்’ என்கின்றனர்.
இத்தகைய கற்றல் அல்லது படித்தல் அந்தத் தேர்வு முடியவும் அதன் குறுகிய கால தேவைக்கருதின நோக்கத்தினால் மறக்கடிக்கப்படும். இது
வாழ்கைக்கு எந்தவகையில் பயன் தந்துவிட இயலும்?
சுமார் ஓராண்டுகாலம் கருத்தூன்றி படிக்க வேண்டிய பாடநூலை ஓரிரு வாரங்களில் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை புரட்டிப் பார்த்துவிட்டுச் சென்று எழுதும் பரீட்சைகள் அளிக்கும் மதிப்பெண்களின் வெற்றி மனப்பான்மை எத்தகைய சமூக நன்மைகளை வழங்கும் என்பது ஆய்வுக்குரியதுதான்
மகிழ்வான கற்றல் சாத்தியமா?
*************
மாணவனின் மனநிலையில் கற்றலுக்கான தேவையை ஏற்படுத்தினால் மட்டுமே கல்வி பெறுவதால் ஏற்படும் முழுமையான அடைவை பெற முடியும்.
அதற்குத்தான் குழந்தைகளின் இயல்பு, மனநிலை, தனித் திறமைகள், ஆற்றல், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் ஒரு துறையை அவர்களது கனவாகவும் இலட்சியமாகவும் தேர்ந்தெடுக்க அவர்களை வழிநடத்த வேண்டும்.
இது ஒவ்வொரு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தலையாய மற்றும் முக்கியக் கடமையாகும். குழந்தைகளின் வெற்றிக்கான முதல் படிநிலையும் இதுவே.
நோக்கமற்ற கல்வியின் பாதை மாணாக்கர்களின் ஒட்டுமொத்த மனவளர்ச்சியையும் பாதித்து, கல்வியைப் பெரும் சுமையாகக் கருத வைத்து அவர்களது சக்தியை வீண்டிக்க வைக்கின்றது.
எனவே வாழ்க்கைக்கான இலட்சியம்
ஒன்றினை அவர்களது மனவிருப்பத்தின் அடிப்படையில் ஏற்படுத்தி அதை அடைவதற்கான வழிமுறை கல்வி மட்டுமே என்ற உண்மையை அவர்களுக்கு புரியவைத்து விட்டால், அந்த இலட்சியமே அவர்களது உள்ளிருந்து கற்றலை இனிமையானதாகவும் மிகவும் இலகுவானதாகவும் உணரச் செய்துவிடும். பிறகு அவர்களைப் படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தவேண்டிய நிலை வராது. இதன்மூலம் வீணாகும் மனித ஆற்றல் “இலட்சியம்” என்னும் வாழ்வியல் முறையினால் நெறிபடுத்தப்பட்டு மானுட மேன்மைக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.



