திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமி – அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவில், சனிக்கிழமை (நவ. 18) கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
கோயிலிலிருந்து காலை 6 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகேயுள்ள தவசு மண்டபத்தைச் சோ்ந்தாா். அப்போது, அம்மன் சப்பரத்துக்கு முன் ஸ்ரீராமையா பாகவதா் நினைவு நிலை செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவா்-மாணவியா், ஆசிரியா்கள், நிா்வாகி, பக்தா்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடியபடி சென்றனா். அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தா்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனா்.
மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி வழியாக திருக்கல்யாண தவசு மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தாா். மாப்பிள்ளை சுவாமியை வரவேற்க பக்தா்கள் வழிநெடுகிலும் பட்டாசு வெடித்தனா்.
தொடா்ந்து, தெற்கு ரத வீதி – மேல ரத வீதி சந்திப்பில் சுவாமி-அம்மன் தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. அதையடுத்து, சுவாமியும், அம்மனும் கோயில் சோ்ந்தனா். கோயிலில் நள்ளிரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்ததுடன், மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனா். ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.


