பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆழ்வை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் அதனை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை, மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக சான்றிதழுடன் ரூ.15 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும். ஆழ்வை., வட்டாரத்தில் விருதுக்கு தகுதியுள்ள விவசாயிகள் தென்திருப்பேரையில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


