“ஆச்சியோ தாமிரபரணி ஆத்தங்கரையில எங்க பாத்தாலும் கதையா இருக்கே, இந்த ஆறு ஓடி எத்தனை வருசம் இருக்கும்?”.
“யாருக்கு தெரியும்?”ஆச்சி பெருமூச்சு விட்டாள்.
“பெரிசா கதையெல்லாம் சொல்லுத உனக்கு தெரியாதா?” ராசுக்குட்டி அழுத்தி கேட்டான்.
“ஏன் நான் என்ன சோசிய காரனா?. முன்னால பின்னால தெரிஞ்சி வைக்க”.
“பொறவு நிறைய கதை சொல்லுத”.
“சரி டே இனிமே கதை சொல்லலை விட்டுருதியா?” ஆச்சி அழுத்து க்கொண்டாள்.
“ஐய்யா ஆச்சி ஏன் இப்படி கோபப்படுத. நீ பெரிய அறிவாளியாச்சேன்னு கேட்டேன்”.
அறிவாளின்னு சொன்னவுடன் ஆச்சிக்கு சந்« தாசம் வந்தது.
“ஏலே ராசுக்குட்டி உங்களை போல எங்கப்பா பள்ளி கூடத்துக்கு என்னை அனுப்பி வைக்கலை. நானும் படிக்கவும் இல்லை”.
படிக்காமலேயே இத்தனை கதை சொல்லுத . படிச்சா இந்த உலகத்தை வித்து புடுவ ஆச்சி”.
ராசுக்குட்டி சிரித்தான்.
“ஏலே என்னை கேலி தான பண்ணுத?”.
“நான் ஏன் கேலி பண்ணுதேன் ஆச்சி. நீ எவ்வளவு பெரிய அறிவாளி இன்னைக்கும் ஒரு நல்ல கதை சொல்லு” என்றான்.
“நீ. கேலி பண்ணுத. உனக்கு கதை சொல்லக்கூடாதுதான். ஆனாலும் பொறவு என்ன செய்ய என் பேர பிள்ளையா போயிட்ட”
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“தாமிரபரணி ஆத்தங்கரையில விககிரமசிங்கபுரமுன்னு ஒரு ஊரு. அந்த ஊருல 300 வருசத்துக்கு முன்னால நமச்சிவாய கவிராயருன்னு ஒருத்தர் வாழ்ந்து வந்தாரு. இவரு தினமும் தாமிரபரணி ஆத்துல குளிச்சிட்டு சிவ பூஜை செஞ்சுக்கிட்டு வந்தாரு. இவர் பெரிய கவிஞர். தினமும் அந்த ஆலயத்தில உள்ள அம்மாளை புகழ்ந்து பாடுவாரு. ஆனால இந்த மனுசனுக்கு வெற்றிலை போடும் வழக்கம் உண்டு. இதனால ஆத்தங்கரையில இருந்து பாடும் கவிஞர் பாட்டை கேட்க உலகம்மையே நேரில ஆத்துங்கரைக்கு வந்திருவா. இதனால அவரு வெற்றிலை எச்சம் அம்மை சேலையில பட்டுட்டு”.
“காலையில கோயிலில பூஜை வைக்க அர்ச்சகரு கதவை தெறந்து இருக்காரு. அங்க அம்மையோட சேலையில வெற்றிலை எச்சில் இருந்து இருக்கு. அதை பார்த்தவுடனே அவரு பயந்தே போயிட்டாரு. அலறி அடிச்சிக்கிட்டு, அந்த ஊர் ராஜாக்கிட்டே போய் சொல்லியிருக்காரு. உடனே அவரு படை வீரர்களை கூப்பிட்டு, காவலர்களே நாலா பக்கம் ஓடி போங்க. இந்த வெற்றிலை எச்சில் அம்மன் சேலையில எப்படி பட்டுச்சு. இந்த காரியத்தை யாரு செய்யுறான்னு கண்டு பிடிச்சிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சாரு”.
“அவுகளும் ஓடிப்போய் ஊர் புறாவும் தேடி பார்த்தாவ. கோயில் வாசலிலுல பலியா காத்து கிடந்தாவ . ஆனால் கோயிலுக்குள்ள யாரும் போவலே”
“மறுநாள் பூசாரி கதவை திறந்து பாத்து இருக்காரு. அன்னைக்கும் வெற்றிலை எச்சில் அம்மன் புடவை மேலே இருந்து இருக்கு. அவர் பயந்தே போயிட்டாரு. யாரே ஒரு மந்திரவாதித்தான் இப்படி பண்ணுறானோன்னு அலறி அடிச்சிக்கிட்டு ராஜா கிட்ட வந்து இருக்காரு”.
“உடனே ராஜாவுக்கு கோபம் வந்திட்டு, விடக்கூடாது நாளைக்கே எப்படியாவது அவனை கண்டு பிடிச்சி அவனை மறுகால் மறுகை வாங்காம விடக்கூடாதுன்னு துடிச்சாரு”.
“இதுக்கிடையில பட்டர் கனவில உலகம்மை தோன்றி இருக்காவ”.
“பூசாரி, ஆத்தங்கரையில கவிராயன் ஒருத்தன் இருக்கான். என் மேலே பிரியமா பாடுவான். அவன் பாட்டை கேட்க தினமும் ஆத்தங்கரைக்கு போவேன். அவன் வெத்திலை போடுத பழக்கம் உள்ளவன். அதனால வெத்திலை போட்டுட்டு பாடுவான். அவன் பாடலை பக்கத்தில நின்று கேட்டதால, என் புடவையில வெத்திலை எச்சில் பட்டுட்டு, அதுதான் வேற நீ பயப்படடுத மாறி ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டா”.
“ஆனாலும் பூசாரிக்கு வேகம். நாம தினமும் அம்மையை தொட்டு அபிசேகம் செய்யுதோம் . நம்மள விட அந்த பய பெரிய இவனா. அவனை தேடி அம்மன் போறா. அந்த பயலை சும்மா விடக்கூடாது. எப்படியாவது ராஜா கிட்ட சொல்லி தண்டனை வாங்கி கொடுக்காம விடக்கூடாதுன்ன முடிவு செஞ்சாரு”.
“மறுநாள். ராஜா கிட்ட விவரத்தை சொன்னாரு பூசாரி. அப்படி பெரிய ஆளு யாரு. அவனை உடனே பிடிஞ்சிட்டு வாங்கன்னு உத்தரவு போட்டாரு ராஜா”.
“படை வீரர்கள் ஊருக்குள்ள போனாங்க. அங்க திண்ணையில கால் மேலே கால் போட்டுக்கிட்டு படுத்துகிடந்த கவிராயரை தூக்கிட்டு வந்தாக”.
“அவரு பதறியே போனாரு. என்னை ஏன் ராசா கிட்ட தூக்கிட்டு போறிய . நான் ஒன்னும் செய்யலையேன்னு கேட்டாரு”.
ஆனாலும் இவர் சத்தத்தை யாரும் கேட்கலை. ராஜா முன்னால கொண்டு போய் நிறுத்துனாவ.
ராஜா கேட்டாரு, “யோவ் புலவரே. நீரு தினமும் அம்மனை நோக்கி பாடுவீரோ?”.
“ஆமாம் ராஜா. ஆமாம்”. என்று பயத்துடன் சொன்னார்.
“ஓ. உம்ம பாட்டை கேக்க அம்மன் நேரில வருவாரோ?”
பரக்க பரக்க முழித்தார் புலவர். “தெரியாதே?”
“யோவ் உண்மையில நீர் பெரிய புலவருன்னா. உலகம்மை கையில தங்க கம்பியில பூ செண்டை கட்டி வைக்கேன். நீரு பாடியே அந்த பூ உம்ம கையில கொண்டு வரணும் செய்வீரா?” என கேட்டார்.
புலவர் அமைதியா இருந்தாரு. பொறவு “சரி ராஜா. நான் அம்மையை வணங்கிறது உண்மையின்னா, அது நடக்கட்டுமுன்னு. அம்மனை வேண்டினாரு. உடனே தங்க கம்பியில ஒரு பூ செண்டை அம்மன் கையில கட்டி வைச்சாங்க.
உடனே நவச்சிவாய கவிராயர் பாட்டு பாட ஆரம்பிச்சாரு. அவர் 96 வது பாட்டை பாடும் போதே தங்க கம்பி உடைஞ்சது. பூச்செண்டு இவரு கைக்கும் வந்துட்டு. உடனே எல்லோரும் ஆச்சரியத்தோட பாத்தாவ.
எல்லாரும் அசந்து போயிட்டாவ. விழுந்து கும்பிட ஆரம்பிச்சிட்டாவ. அதுக்கப்புறம் அந்த பகுதியில புலவர் பேரு பெரிசா ஆயிட்டு,
ஆச்சி அமைதியானாள். ராசுக்குட்டி சொன்னான்.
“சும்மாவா தங்க கம்பியை உடைச்சு மலர் செண்டை எடுத்து இருக்காருன்னா சும்மாவா?”
“ம். ஆனாலும் விதி யாரை விட்டுச்சு. புலவருக்கும் ஒரு கஷ்டம் வந்தது”.
“என்ன கஷ்டம் ஆச்சி”.
“சொல்லுதேன் அவரசப்படாம கேளு”
“சொல்லு ஆச்சி”
கவிராயருக்கு எல்லா விதத்திலும் சிறப்புத்தான். ஆனா அவருக்கு முன் ஜென்ம பயனா நோய் வந்திட்டு. அந்த நோயை இவரள தாக்கு பிடிக்க முடியலை. உடபெல்லாம் ஒரே வலி. தாங்க முடியலை. இனிமே உயிரோட இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு. உடனே அவரு தாமிரபரணி ஆத்து மலைக்குள்ள இருந்த கல்யாணி தீர்த்தத்துக்கு போனாரு. அங்கிருந்து குதிச்சி ஆத்தில விழுந்து தற்கொலை பண்ண முடிவு பண்ணிட்டாரு”.
“ஐய்யய்யோ”.
“பேர் புகழு இருந்த கவிராயர் நிலமை இப்படி ஆகி போச்சி”.
“ஆமாம் யாருனாலும் படுத பாடு பட்டுத்தான் தீரணும் போல.
ஆத்தங்கரையே நடந்துபோய் கடைசியில கல்யாணி தீர்த்தத்துல பாறை மேலே நின்னு குதிக்க பாத்து இருக்காரு. அந்த சமயத்தில அங்க உலகம்மை தோன்றியிருக்காக. “கவிராயரே கவிராயரே யாரா இருந்தாலும் முன்ஜென்ம பாவத்தை அனுபவிச்சே தீரணும். நீரு செத்தா கூட பாவம் தீராது. அதனால வாழ்ந்து தான் பாவத்தை கழிக்கணுமுன்னு சொல்லியிருக்காவ. அதுக்கப்புறம் மனம் திரும்பி ஊருக்கு வந்து இருக்காவ கவிராயர்”. ஆச்சி சொல்லி முடித்தாள்.
“யப்பாடியோ. நல்ல வேளை தப்பிச்சாரு கவிராயரு” ராசுக்குட்டி சந்தோசமாக சொன்னான்.
“அது மட்டுமா? கவியராயருக்கு பல நேரம் காட்சி கொடுத்துருக்காவ உலகம்மை”.
கவிராயர் ஒரு நாளு வீட்டுக்கு சாப்பிட வந்து இருக்காவ. அந்த சமயத்தில அவரோட மக, அப்பாவுக்கு உணவு கொடுக்க தோது இல்லாம இருந்து இருக்கா. இதனால பக்கத்து வீட்டு ஆச்சியை சாப்பாடு வச்சி கொடுக்க கூப்பிட போயிருக்கா.
இதுக்கிடையில வீட்டுக்குள்ள வந்த கவிராயர் சாப்பிட வாழை இலையும் அருசுவை உணவும் தயாரா இருந்து இருக்கு. அங்க மக இருந்து கவிராயருக்கு சோறுபோட்டு கவனிச்சிருக்கா. என்னைக்குமில்லாம அன்னைக்கு ரொம்ப ருசியா இருந்துச்சு. நல்லா சாப்பிட்டாரு. அப்புறமா? திண்ணையில வந்து உட்காந்து வெத்திலை போட்டுக்கிட்டு இருந்தாரு. வெளியே போன மகள் ஓடியே வந்தாள். “யய்யா செத்த இருங்க. பக்கத்து வீட்டு ஆச்சி வந்திருவா. பசியாறலாமுன்னு” சொல்லியிருக்கா.
கவிராயர் அசந்தே போயிட்டாரு. “ எதிருல மக நிக்கா. அப்போ நமக்கு சோறு போட்டது யாரு?”. உள்ள ஓடிப்போய் பாத்தாரு. அங்க யாரும் இல்லை. அப்படின்னா சோறு போட்டது உலகம்மைதானு முடிவு செஞ்சாரு.
தான் தாயா நினைச்ச அம்மன் மகளா வந்து உணவு பறிமாறிட்டாளேன்னு மகிழ்ச்சியின் உச்சிக்கே போயிட்டாரு கவிராயரு.
நடந்த சம்பவத்தை மககிட்டே சொன்னாரு. இரண்டு பேரும் உலகம்மையை நினைஞ்சி கும்பிட்டு விழுந்தாவ.
“அடங்கப்பா உலகம்மை இவ்வளவு பெரிய தெய்வமா இருந்திருக்காவளே”. ராசுக்குட்டி ஆச்சரியப்பட்டான்.
“பொறவு அம்மன் எப்படிப்பட்ட தெய்வம். இன்னைக்கும் நம்ம பாவம் போவனுமுன்னா பாவநாசம் வந்து தானே வணங்கி நிக்காவ மக்க”.
“என்ன ஆச்சி சொல்லுத?”.
“ஆமாம்”.
“நம்ம மக்க எல்லோரும் பாவத்தை போக்க கங்கையில போயி குளிக்கணுமுன்னு சொல்லுவாவுல்லா. இதுக்காக பல பேரு நடந்தே வடக்க காசிக்கு போவவ. காசிக்கு போன பலர் திரும்பி வராம அங்கேயே அடங்கி போவாவ. இதனால கங்கை நதியே பாவ நதியா அழுக்கு நதியா போயிட்டாம். அந்த நதி தன் பாவ அழுக்கை போக்கனுமுன்னு நினைச்சிச்சாம். இதனால மார்கழி மாசம் தெக்க தாமிரபரணி நதியில வந்து மூழுகி தன் பாவத்தை போக்கிகிட்டாம்”.
“என்ன ஆச்சி சொல்லுத?”
“ஆமாம் நம்ம பாவத்தை போக்குத கங்கை நதி, தன் பாவத்தை போக்குறதே நம்ம தாமிரபரணி தான்”.
“அப்படியா? இன்னைக்கு மார்கழி மாசம் தானே. நானும் போய் ஒரு முங்கு போட்டுட்டு வாறேன். இங்கத்தான் கங்கை இருக்கும். நான் கங்கையில குளிச்ச மாறியும் இருக்கும். என் பாவமும் போவும்”. ராசுக்குட்டி சிரித்தான்.
“அட கழுதை பயலை. சின்ன பய உனக்கு எங்க பாவம் பிடிக்க போவுது. குழந்தை மனம் வெள்ளை மனமுடே”. ஆச்சி அவனை கண்டித்தாள்.
“சரி. எப்படியோ. இனி பாவம் புடிக்காம இருக்கட்டுமுன்னு ஒரு முங்கு முங்கிட்டு வாறேன்.
சிட்டாய் தாமிரபரணியை நோக்கி ஓடினான் ராசுக்குட்டி.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


