திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும். அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும்.
இந்த சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டது முதல் பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து 8 முறை இந்த பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தை சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் பணிகள் தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முதல் பாலத்தின் மேல்பகுதியில் உள்ள தார்களை அகற்றும் பணியில் ராட்சத இயந்திரம் மூலம் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த ராட்சத இயந்திரம் மூலம் பாலத்தில் எடுக்கப்படும் தார்க்கழிவுகளை நேராக ஆற்றுக்குள் போட்டுள்ளனர். மேலும் லாரிகள் மூலம் அள்ளப்படும் தார்க்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சய இயந்திரம் மூலம் தார்கழிவுகளை நேராக ஆற்றுக்குள் கொட்டும் பணி நேற்று இரவு முதல் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் வல்லநாடு பாலத்தின் கீழ்ப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள தார்க்கழிவுகளை நேரில் பார்வையிட்டார். அவருடன் வல்லநாடு கிராம நிர்வாக அலுலர், பசுமை தமிழ்தலைமுறை அமைப்பு நிறுவனர் சுகன் கிறிஸ்டோபர், கலியாவூர் துணைத்தலைவர் பரமசிவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


