தமிழகத்தில் இலக்கிய செழுமைமிக்க தமிழ் மொழியின் மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களை நடத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .
அதன்படி தமிழகத்தில் முதல் இலக்கியத் திருவிழா பொருநை நதி நாகரிக மரபின் அடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைத்து வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டையில் நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேற்கு கோட்டைவாசல், வ.உ.சி மைதானம், பிபிஎல் திருமண மண்டபம் என ஐந்து இடங்களில் தனித்தனி அரங்கில் நடைபெற உள்ளது.
இரு நாட்களும் காலை 9.30 முதல் இரவு 8:30 வரை விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் நவீன இலக்கியம் பழந்தமிழ் இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், திராவிடர் இலக்கியம் ஆகிய தலைப்புகளில் தலைசிறந்த இலக்கியவாதிகள் பேச்சாளர்களின் சிறப்பு உரைகள் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது.
நூற்றாண்டு மண்டபத்தில் மண்வாசனை என்ற தலைப்பில் கரிசல், நெல்லை, நாஞ்சில், நெய்தல் வட்டார இலக்கிய மரபுகள் குறித்த உரையாடல்கள் இடம் பெறும்.
வ உ சி அரங்கில் முதுபெரும் கவிஞர்கள் இளம் கவிஞர்களின் கவிதை வாசிப்பு கவிஞர்களுக்கு இடையிலான உரையாடலுடன் கூடிய கவிதை பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.
பி.பி.எல் திருமண மண்டபத்தில் சங்கமம் என்னும் தலைப்பில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெறும்.
இதே போல் மேற்கு கோட்டை வாசலில் திரை மொழி என்னும் தலைப்பில் உலக சினிமா, இலக்கிய சினிமா ஆவண படங்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என திரையிடலும் அது தொடர்பான விவாதங்களும் நடைபெற உள்ளன.
‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம். மாணவர்கள் அஞ்சலட்டைகளில் கடிதம் எழுதி தலைமையாசிரியர்கள் மூலம் வரும் 22ஆம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும். சிறந்த கடிதங்களுக்கு இலக்கியத் திருவிழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.
‘தமிழ் பேசலாம் வாங்க’ என்ற தலைப்பில் தூய தமிழில் பேசும் போட்டியில் பங்கேற்க மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து தலா இரண்டு மாணவர்களை தேர்வு செய்து வரும் 22ஆம் தேதி வரையிலும்
‘தமிழே உனக்காக’ என்னும் தலைப்பில் ஓலைச்சுவடியில் குறுங்கவிதை எழுதும் போட்டிக்கு வரும் 23ஆம் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களிடம் ஓலைச்சுவடிகள், மூலப் புத்தகங்கள், நாட்டுப்புற கலைகள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் இருப்பின் அவற்றை வரும் 24ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரிடம் வழங்கலாம். அவை விழாவில் காட்சிப்படுத்தப்படும்.


