சாத்தான்குளத்தில் தனது சகோதரர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளதாக கூறி திருநங்கை திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்த ஞானராஜ் மகன் முத்துக்குமார். இவரது வீட்டருகே நேற்றிரவு கனியான் கூத்து கலைஞர்கள் இருவர், தூங்கி ஓய்வெடுத்தனர். அப்போது கனியான் கூத்து கலைஞர் ஒருவரின் செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் செல்போன் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் திருநாமகனியிடம் (37) வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவதூறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனிடையே திருநாமகனியிடம் முத்துக்குமாரின் தாய், மாயமான செல்போனை கொடுக்க சென்றாராம். அப்போது செல்போனை உடனடியாக கொடுக்காதது குறித்து திருநாமகனி முத்துக்குமாரின் தாயை அவதூறாக பேசினாராம். தனது தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், திருநாமக்கனியை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்துக்குமார் மீது தட்டார்மடம் எஸ்.ஐ.நெல்சன் வழக்கு பதிவு செய்தார். இதனிடையே முத்துக்குமாரின் சகோதரி திருநங்கை செல்வி(36) என்பவர் தன்னை திருநாமகனியின் தந்தை கணேசன் அவதூறாக பேசி தாக்கியதாக தட்டார்மடம் போலீசில் புகார் அளிக்கசென்றார்.
ஆனால் புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் செயல்படும் வட்ட சட்டப்பணிகள் மையத்தில் தான் திருநங்கை என்பதால் தனது புகாரை போலீசார் ஏற்க மறுத்து விட்டதாக புகார் அளித்தார். சட்ட பணிகள் மையம், மீண்டும் போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் மீண்டும் புகார் செய்யாமல் திருநங்கை செல்வி, நேற்றிரவு சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் போலீசார். திருநங்கை செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாத்தான்குளத்தில் திருநங்கை திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


