எளிமையாக இருப்பதாலேயே பல அற்புதமான விஷயங்கள் இங்கே அலட்சியப்படுத்தப்படுவதை நாம் மிக சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இதில் கீரை முதன்மையானது. தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும்.
பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் கீரையைச் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில், வைட்டமின் சி வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே வைட்டமின் சி இருக்கும். ஆனால், கீரையை அதிக நேரம் வேகவைப்பதால் வைட்டமின் சி ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும்.
நம்மூர்களில் மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய கீரை வகையில் அரைக்கீரையும் ஒன்று. இது கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம். ஓரளவு பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்தும் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது. புரதம் மற்றும் கலோரி மிகக் குறைந்த அளவே இருந்தாலும் இது எல்லோருக்கும் ஏற்றது.
அரைக்கீரையை மசியல் செய்து சாப்பிடலாம். அரைக்கீரையை இரண்டு வெள்ளபூடு பல்லுடன் வேகவைத்து மசிக்கப் பயன்படுவது தான் கீரைமத்து. வேகவைத்தக் கீரையை கல்சட்டியில் போட்டு கீரைமத்தால் நன்றாக கடைந்தல் கீரைமசியல் தயார். ஆனால் இன்றைய நாகரிக வாழ்வில் கீரைமத்து மறைந்து வரும் புழங்கு பொருள் பட்டியலில் சேர்ந்து பல காலம் ஆகிவிட்டது. இன்று கீரை கடவதற்கு அநேகமாக நமது இல்லங்களில் மிக்ஸி தான் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் கல்சட்டியில் கீரைமத்தால் கடைந்த கீரையின் ருசியே தனி தான்.
படத்தில் பார்ப்பது கீரைமத்து.


