கடந்த வாரம் நானும் எனது மனைவியும் கழுகுமலைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் சென்றிருந்தோம். அங்கு உறவுகளுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்தோம். மலரும் நினைவுகள் இதயத்தைக் கிளறிவிட, மகிழ்ச்சியில் மனம் குதூகலிக்க, சோர்வாக இருந்த உடலில் சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. அவர்களின் அயராத உழைப்பு, கனிவான உபசரிப்பு, அனுசரணையான பேச்சு என போய்க் கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்துக்குள் 15 மாட்டு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிக் கொண்டு *”ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி”* யுடன் வந்தன. விசாரித்ததில் அவர்கள் நாடோடிகள் என்பதும், ஆறு மாதங்கள் ஊரிலும் ஆறு மாதங்கள் வெளியிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரியவந்தது.
ஒரு மாட்டு வண்டிக்குள் ஒரு குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்துமே இருந்தன. அந்தக் கிராமத்தில் அதிகபட்சம் 15 நாட்கள் 15 குடும்பங்களும் கூடாரம் அமைத்துத் தங்குவார்களாம்.
எத்தனையோ நாட்களுக்குப்பின் அந்த எளிமையான, தொழில் நுட்ப வளர்ச்சி புகாத, ஒற்றுமையான, உழைப்பையே மூலதனமாகக் கொண்ட, தன்னம்பிக்கையான அவர்களை வியந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அந்தக் கிராமத்தின் அழகும் அவர்களின் வருகையும் மனதுக்கு உற்சாகத்தையும், நிறைவையும் கொடுத்தது.
15 நாட்கள் முடிந்ததும் அடுத்த ஊருக்குக் கிளம்பி விடுவார்களாம். *”இந்த பூமி யாருக்கும் சொந்தமில்லை. எதுவும் நிரந்தரம் இல்லை”* என்னும் செய்தியை எனக்கு அது உணர்த்தியது.