தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியை தொல்லியல் ஆர்வலர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதற்காக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தூய யோவான் கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர் ஜான், பாளையங்கோட்டை சித்த கல்லூரி பேராசிரியர் டாக்டர் சோமசுந்தரம், ஆழ்வார்குறிச்சி குட் செப்பர்ட் பள்ளி தாளாளர் அந்தோணி பாபு, தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க பொறுப்பாளர் பரமசிவன் உள்பட பலர் இவ்விடத்தினை பார்வையிட்டனர்.
அவர்கள் சிவகளையில் முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை அதிகாரி பரத் விளக்கமளித்தார்.
அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியை பார்வையிடச் சென்றனர். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன், செங்கல்கட்டுமான அமைப்பு, 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய் போன்ற பழங்காலப் பொருட்களை பார்வையிட்டனர். ஆய்வுகுறித்து ஆய்வாளர் காளிஸ்வரன் விளக்கமளித்தார்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, பாண்டியனின் துறை முகமான கொற்கை 2500 வருடம் பழமையானது என கணக்கீடு இருந்தது. தற்போது இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் இருந்தற்கான சான்றுகள் கிடைத்து கொண்டே இருககிறது. ஒன்பது அடுக்கு கொண்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட திரவ பொருள்கள் வடிகட்டும் குழாய் தற்போது கிடைத்து கொற்கலன் மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. இதன் ஆய்வு முடிவுகள் வரும் போது தமிழரின் பெருமை, நாகரீகம் மிகச்சிறப்பாக போற்றப்படும். அந்தநாள் பொன்னாள் அந்த நாளை பொருநை கரை அகழாய்வு ஆர்வலர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். என்றார்.
இந்த மாத இறுதியில் ஆய்வுப் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆய்வாளர் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது


