தூத்துக்குடியில் செப்.20ல் ஆசிரியர் பயிற்றுநர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு!
தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வருகிற 20ம் தேதி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிக்கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழுள்ள மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார மற்றும் குறு வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு 20.09.2021 காலை 9 மணி அளவில் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உரிய நாளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.பொது மாறுதல் கலந்தாய்விற்கு அரசாணை(1டி) எண்.134, பள்ளிக்கல்வி (ப.க.5(1)) த் துறை நாள் 18.08.2021ல் குறிப்பிட்ட கீழக்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
1. முற்றிலும் கண்பார்வையற்ற (Total Blindness).
2. 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள்.
3. மனவளர்ச்சி குன்றிய மற்றம் மாற்றுத் திறனாளி குழந்தை உள்ள பெற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தைகளின் சட்ட ரீதியான பாதுகாவலர், (மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட நலவாழ்வு அலுவலரால் உரிய சான்று பெற்றிருக்க வேண்டும்).
4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள்.
5. இருதய மாற்று அறுவை மற்றும் மூளைக்கட்டி (டீசயin வுரஅழச) அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.
6. கடுமையான பாதுகாக்கப்பட்ட புற்று நோயாளிகள்.
7. 01.06.2021 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பயிற்றுநர்களாக பணிபுரியும் இராணுவ வீரரின் மனைவி.
8. விதவைகள் மற்றும் 40 வயதினைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத முதிர் கன்னியர்.
9. 2014ம் ஆண்டு ஜீன் மாதத்தில் வெளி மாவட்டங்களுக்கு பணி நிரவலில் (Deployment) சென்றவர்கள்.
10. கணவன் மனைவி பணியில் இருப்பவர்கள் எனில் 30 கி.மீக்கு மேல் பணிபுரியும் பட்சத்தில் பணியாற்றும் மாவட்டத்திற்கு முன்னுரிமை.
11. மேற்குறிப்பிட்ட முன்னுரிமை அல்லாதவர்கள்.
கொரோனா வைரஸ் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்கள் 01.06.2020 க்கு பின்னர் கணவன் அல்லது மனைவி திடீரென விபத்திலோ அல்லது மீளா நோய்வாய் பட்டோ இறந்திருந்தால் அத்தகைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு குறித்த விதிமுறைகளுக்கு விலக்களித்து சிறப்பு நிகழ்வாக கருதி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாறுதல் ஆணை வழங்கலாம் என தூத்துக்குடி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.