தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3 மாதங்களாகப் பூட்டிக்கிடக்கும் பொதுக் குளியலறை மற்றும் கழிப்பறையைத் திறக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகப் பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பறை மற்றும் குளியலறையை உடனடியாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என அண்ணாநகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பாக மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் அண்ணாநகர் குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பாக வக்கீல் சிவசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது பகுதியில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறை மற்றும் குளியலறையை இப்பகுதியைச் சுற்றியுள்ள மங்களபுரம், மகிழ்ச்சிபுரம், கே.வி.கே. நகர் மற்றும் ராஜகோபால் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று மாத காலமாக இந்தக் கழிப்பறை பூட்டப்பட்டுள்ளது.
இக்குளியலறையின் அருகாமையில் பிரசித்தி பெற்ற தென்பழனி முருகன் கோவில், தொட்டி நாயக்கர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட கோவில், பத்ரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் போன்ற ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்கு இந்த வளாகத்தையே பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாகத் தொட்டி நாயக்கர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட கோவிலில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காகப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் தினமும் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். ஆனால், அவர்களின் குளியல் மற்றும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கான அத்தியாவசியத் தேவைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வித மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்தக் கழிப்பறையைத் திறந்திருந்தாலே இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காது.
அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டு விசேஷங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளின் போது இக்குளியலறையைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போதும் இப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பூட்டிக்கிடக்கும் இந்தக் கழிப்பறை மற்றும் குளியலறையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


