திருச்செந்தூரைத் தனி கல்வி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமையாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில், திருச்செந்தூரைத் தனி கல்வி மாவட்டமாக உருவாக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுப் புதிய தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் சார்பில், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்டத் தலைவர் சற்குணராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகத் தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் முனியசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சீதா மகேசுவரி ஆகியோர் கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களின் கல்விச் சேவையைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவின் முக்கியப் பகுதியாகப் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்துப் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தவெக அரசு புதிதாகப் பொறுப்பேற்றவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை (DA) உடனடியாக அதிகரித்து வழங்கியதற்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்களில், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (CPS ஒழிப்பு) இந்த அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நிர்வாக வசதிக்காகத் திருச்செந்தூரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய ‘திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை’ உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே பள்ளித் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியும்.
ஆனால், மேல்நிலைக்கல்வி முடித்த மாணவர்களை உயர்கல்வியில் (கல்லூரிகளில்) சேர்ப்பதற்காக, கோடை விடுமுறை நாட்களில் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்ட கல்வித்துறை உத்தரவுகளின்படி ஆசிரியர்களைப் பணிக்கு அழைப்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உயர்கல்வி மற்றும் கல்லூரி சேர்க்கை நடவடிக்கைகளுக்கு அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் பள்ளி ஆசிரியர்களைப் பணி செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் இந்த மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட அமைப்புச் செயலாளர் தர்மராஜ், மகளிர் அணிச் செயலாளர் மரியசெல்வி, கல்வி மாவட்டத் தலைவர்கள் சிவசக்தி கணேஷ்குமார், முத்துக்குமார், செயலாளர்கள் சேகர், ராஜ்குமார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


