மணிமுத்தாறு அணை கட்டுவதற்காகத் தூத்துக்குடி மாவட்ட முன்னோர்கள் நிதி வழங்கியதற்குப் பரிசாகக் கிடைத்த ‘பழந்தொழி’ எனப்படும் முன்கார் சாகுபடி உரிமை, கடந்த 5 ஆண்டுகளாக முற்றிலும் முடங்கியுள்ளதால், தாமிரபரணி பாசன நம்பகத்தன்மையை மீட்க மணிமுத்தாறு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தாமிரபரணி பாசன அமைப்பின் மொத்த சாகுபடி பரப்பான 86,107 ஏக்கரில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகளின் கீழ் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மருதூர் மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய பிரதான கால்வாய்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 53 முக்கியக் குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
முந்தைய காலங்களில் இக்கால்வாய்கள் சீராக இருந்தபோது, அக்டோபர் முதல் மார்ச் வரை ‘பிசான சாகுபடியும்’, ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை ‘கார் சாகுபடியும்’ தடையின்றி நடந்தன. இதுதவிர, கோடைக் காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரத்யேக உரிமையாக ‘பழந்தொழி’ (முன்கார்) சாகுபடியும் கூடுதல் லாபத்திற்காக மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது முறையான கால்வாய் பராமரிப்பு இல்லாததாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் பிசான சாகுபடி மட்டுமே நடக்கும் அவலநிலை ஏற்பட்டு, முன்கார் சாகுபடி முற்றிலும் மறைந்துவிட்டது.
இந்த முன்கார் சாகுபடி என்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் ரத்தத்தோடு கலந்த வரலாற்று உரிமையாகும். 1950-களில் மணிமுத்தாறு ஆற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அணை கட்டக் கோரி, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம் மூலம் பெருந்தலைவர் காமராஜரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் என காமராஜர் கூறியதை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அணை கட்ட நிதியை அள்ளிக் கொடுத்தனர்.
இதன் பயனாக 1956-இல் மணிமுத்தாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த மக்கள் பங்களிப்பிற்குப் பரிசாக, கோடைக் காலத்தில் அணையின் நீர்மட்டம் 80 அடிக்குக் கீழ் இருக்கும் பட்சத்தில், அதில் வரும் நீர்வரத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா விவசாயிகள் மட்டும் ‘பழந்தொழி’ சாகுபடி செய்து கொள்ளும் பிரத்யேக உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது.
இது குறித்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் புவிராஜ் கூறும்போது, “தென்காலில் கடம்பா குளம் வரையிலும், வடகாலில் ஆறுமுகமங்கலம் குளம் வரையிலும் இந்த முன்கார் சாகுபடிக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அணைகளில் போதிய தண்ணீர் இருந்தாலும், குடிநீரைக் காரணம் காட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களும், பொதுப்பணித்துறையும் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில்லை.
இதனால் நமது முன்னோர்கள் அள்ளிக் கொடுத்துப் பெற்ற உரிமை பறிபோகிறது. மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்காக 20 எம்.ஜி.டி திட்டத்தில் அதிகப்படியான தண்ணீர் உறிஞ்சப்படுவதால் விவசாயத்திற்குத் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, புதிய தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் மணிமுத்தாறு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து, முன்கார் சாகுபடிக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


