சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீநாத் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு வருகை தந்து, திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, தற்போதைய புதிய சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை (மே 17) தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, தவெக மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்க்கொத்துகள் மற்றும் பொன்னாடைகள் வழங்கி உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் பகுதிக்குள் வருகை தந்த ஸ்ரீநாத் எம்.எல்.ஏ., நகரின் முக்கியப் சந்திப்புகளில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் மற்றும் திராவிடப் பெரும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதையைச் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகப் பகுதிகள் வழியாகத் திறந்தவெளி வாகனத்தில் வாக்காளர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். அவருக்குப் பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர்.


