உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது[2] ,இதில் 270,000 குழந்தைகள்.[3]
எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்
எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).
இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
- எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது ‘Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.


