தாமிரபரணியை சீர்செய்ய நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் தாமிரபரணி ஆர்வலர்கள் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் அவர்களிடம் கொடுத்தனர். அதற்கான தகவலை என்னிடமும் கொடுத்தார்கள்.
தாமிரபரணியை சுத்தப்படுத்தி சாக்கடை கலக்காத நதியாக மாற்றவேண்டும் என்று நான் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு நேரடியாக விசிட் செய்து நதியை காப்பாற்ற பல்வேறு உத்தரவுகள் பிரபித்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அரசின் மூலம் நதியை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகிறார். தாமிரபரணி ஆர்வலர்களிடம் இதற்கான விரிவான அறிக்கையை கேட்டு வருகிறார். இந்த நிலையில் நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் வீரபுத்திரன், கூடல் அரசன் கொண்ட குழுவினர் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். இந்த அறிக்கையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கர் சுவர் போல தாமிரபரணியின் இருகரையில் 60 கிலோ மீட்டருக்கு சுவர் அமைத்தும், சாக்கடை இல்லா நதியாக மாற்ற எகிப்தில் உள்ளது போன்ற சாக்கடை சுத்தகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயார் செய்தார்கள். இந்த அறிக்கையை நெல்லை எம்.பி ராபர்ட் புருஸ் அவர்களிடம் நம் தாமிரபரணி சட்ட ஆலோசகர் சுடலைமணி வழங்கினர். அவருடன் தாமிரபரணி ஆர்வலர்கள் கூடல் அரசன், வீரபுத்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியை பிரேமலதா, தமிழ் சான்றோர் பேரரவை மற்றும ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதர்சன், வழக்கறிஞர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதற்கிடையில் 3.1.2025 அன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜர் ஆக முடிவு செய்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரி களுக்கும் பல்வேறுடி நெல்லை மாவட்ட நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி.ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜரானார். அவர் நீதிபதியிடம் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும்படி நாடாளுமன்றத்தில் பேசினேன். தாமிரபரணியை பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா எனவும் கோரினேன். அப்போது மத்திய அரசு தரப்பில் 17 மாநிலங்களில் 57 நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக சுமார் ரூபாய் 99 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க கோரி மாநில அரசு சார்பில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே தாமிரபரணியை பாதுகாக்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் உரிய நிதி கேட்டு பெற மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்பும்படி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களால் வனப்பகுதி அசுத்தமாகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பக்தர்கள் நடவடிக்கை உள்ளது. இதனால் அகஸ்தியர் அருவில் தண்ணீர் அசுத்தமாக மாறுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பக்தர்களின் மத நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் பாதுக்கப்பட்ட வனப்பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியை பாதுகாக்கும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அடுத்த விசாரணையில் அதிகாரிகள் ஆஜராக தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து வழக்கை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நிச்சயம் 24 ந்தேதி நல்லதொரு தீர்ப்பு வரும் என நினைகிறேன். இதற்கிடையில் தாமிரபரணி சம்பந்தாமாக பல அதிகாரிகளையும் முக்கிய ஆளுமைகளையும் நான் சென்னை சென்று சந்திக்க திட்டமிட்டேன். இதற்கான புத்தக கண்காட்சியையொட்டி நாள் குறிக்கப்பட்டது.
இதற்கிடையில் மதுரை தமிழ் சங்கத்தில் நான் பேசுவதற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தும் போது மதுரை ஜிகிர்தண்டாவுக்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் உள்ள ஒரு தொடர்பை நான் உங்களிடம் கூறப்போகிறேன்.
மதுரையில் நான் சந்தித்தது. எனது அன்பு நண்பர் அப்துல் சமது. ஆறாம்பண்ணையை சேர்ந்தவர். என்னோடு ஒன்றாக கதீட்ரல் மேல் நிலைப்பள்ளியில் படித்தவர். நான் பஸ் நடத்துனராக ஜி.எம்.டி கம்பேனியில் பணியாற்றிய போது , இவர் ஏ.பி.சி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றினார். வேலை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு மதுரை சென்று விட்டார். நீண்ட நாள் அவரை நான் பார்க்க இயலவில்லை. ஒரு நாள் என்னிடம் என் மகளுக்கு திருமணம் வைத்திருக்கிறேன். ஆறாம்பண்ணையில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். வந்து விட்டு போ என உரிமையோடு அழைத்தார். சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு வந்தேன். அதன் பின் மதுரை வந்தால் என்னை பார்க்காமல் போக கூடாது என கூறியிருந்தார்.
டிசம்பர் 5, 2024 ந்தேதி மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்கத்தில் உரையாற்ற சென்று இருந்தேன். நான் மதுரை வருகிறேன் என்றவுடனே என்னை எதிர்பார்த்து, மதியம் சாப்பிடாமல் காத்து இருந்தார் அப்துல் சமது. எனது நண்பர்களோடு நான் மதியம் வேறு இடத்தில் சாப்பிட்டு விட்டேன். இதனால் வருத்தமடைந்தாலும், நான் வருவதற்கு 3 மணி ஆகியும் கூட சாப்பிடாமல் காத்து இருந்த அப்துல் சமது, என்னை தேடி பெரியார் பேருந்து நிலையத்துக்கே வந்து விட்டார். திருநெல்வேலியில் பஸ்ஸில் எப்படி சுறுசுறுப்பாக இருப்பாரோ, அதே சுறுசுறுப்பு. சிரித்த முகத்தோடு ஓடி வந்து கைகுலுக்கினார். என்னையும் பேரன் திருப்பதியும் அழைத்துச் சென்று அவரது பாய் ஜிகிர்தண்டா கடையில் ஜில் என்று ஸ்பெஷல் ஜிகிர்தண்டா கொடுத்தார். சிறிது நேரத்தில் பல கதைகளை பேசினோம்.
நண்பனின் நட்பும், அவர்தந்த ஜிகிர்தண்டா சுவையும் பிரமாதமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது நீண்ட நேரம் என்னால் நின்று பேச இயலவில்லை. திருநெல்வேலி ரயிலை பிடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் எங்களை ஆட்டோவில் அனுப்பி வைத்தார். நாங்கள் அங்கிருந்து செல்லும் வரை நின்று கை அசைத்து வழி அனுப்பிய நண்பன் அப்துல் சமது, எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதவர். மதுரைக்கு ஜிகிர் தண்டாவுக்கும் தாமிரபரணிக்கு என்னதொடர்பு.
( நதி வற்றாமல் ஓடும்)


