செய்துங்கநல்லூரில் இன்று காலை முதலே வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் புதன் கிழமை சந்தையில் அசைவ விரும்பிகள் கூட்டம் குறைவாக இருந்தாலும் மற்ற பொதுமக்கள் கூட்டம் மிதமாக இருந்தது. எப்போதுமே இந்த வாரச்சந்தையில் மாலை 5 மணிக்குமேல் தான் கூட்டம் மிக அதிகமாக வருவார்கள். சுமார் 1000க்கு மேற்பட்ட மக்கள் கூடுவார்கள். ஆனால் சரியாக 5 மணி அளவில் தீடிரென்று மேகம் திரண்டது. தொடர்ந்து கனத்த மழை பெய்தது. இதுவரை பெய்த மழையில் தற்போது பெய்த மழை கனமழையாக இருந்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையில் செய்துங்கநல்லூர் பஜார் வெள்ளக்காடானது. இங்குள்ள பல கடைக்குள் மழை நீர் புகுந்த காரணத்தினால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தினை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். புதன் கிழமை விறுவிறுப்பாய் வியாபாரம் நடந்து கொண்டிருந்த சந்தைக்குள் வெள்ள நீர் ஓடியது. இதனால் சந்தைக்குள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்த வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். முட்டளவு தண்ணீருக்குள் நின்று வியாபாரம் பார்த்தவர்கள். வாடிக்கையாளர்கள் வராத காரணத்தினால் பொருள்களை விற்க முடியாமல் அப்படியே திருப்பிக் கொண்டு சென்றனர். பஜாரில் பல இடங்களில் நிறுத்தப்பட்ட இருச்சககர வாகனங்கள் பாதி அளவு தண்ணீருக்குள் மூழ்கியது. செய்துங்கநல்லூரில் உள்ள தாழ்வான பகுதியான அண்ணா நகர், தென்னஞ்சோலை, கலைஞர் நகர் போன்ற பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார். கீழ தூது குழியில் பேருந்து நிலையத்தில் பல பயணிகள் காத்திருந்தனர். அப்போது அங்கு மின்னல் தாக்கியது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
செய்துங்கநல்லூரில் நெடுஞ்சாலைத் துறை மூலமாகச் சாலை அமைக்கும் பணி நடந்த காரணத்தினால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலை வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கடைக்குள் புகுந்தது. இதற்கிடையில் இதுகுறித்து கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா , செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொட்டும் மழையில் ஜே.சி.பி மூலம் தேங்கும் நீரை வடிய வைக்கப் பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனால் செய்துங்கநல்லூர் சந்தை பகுதி மற்றும் தென்னஞ்சோலையில் தேங்கும் நீரை அகற்றினர். இந்த பணியின் போது பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன், சமூக சேவகர் சுடலைமுத்து உள்பட செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
கொட்டும் மழையில் தண்ணீர் வடிகட்ட நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன் மற்றும் சமூக சேவகர் சுடலை முத்து உள்பட பணியாளர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.


