தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் பஸ் ஸ்டாப் திறப்பு : மாநகராட்சி விளக்கம்!
தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் கனிமொழி எம்பி திறந்து வைத்த பஸ் ஸ்டாப் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவாலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகர் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநகராகும். மாநகர் பகுதியில் பல்வேறு அரசு துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும்கல்லூரிகள் அமையப்பெற்றுள்ளன. தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. எனவே பொது மக்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
சீர்மிகு நகர அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பபட்ட பணியான பேருந்து நிறுத்துமிடம் ஒன்றுக்கு ரூ.19.25 இலட்சம் வீதம் 8 இடங்களுக்கான மொத்தத் தொகை ரூ.154.00 இலட்சம் மதிப்பீட்டில், நகரின் முக்கிய பகுதிகளான மிகவும் அவசியமான கீழ்கண்ட இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து பேருந்துகளில் ஏறும் வண்ணம் மேற்கூரையுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1) திரு.வி.க.நகர், 2) அரசினர் பாலிடெக்னிக் முன்பு, 3) செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 4) தந்தி ஆபிஸ் அருகில், 5) சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், 6) ஜிம்கானா கிளப், 7) திரு இருதய ஆஸ்பத்திரி எதிர்புறம் மற்றும் 8) ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கலைக்கல்லூரி முன்பு. மேற்படி பணியானது 28.01.2021ல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 25.08.2021ல் முடிக்கப்பட்டது.
மேற்படி எட்டு இடங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய Stainless Steel பேருந்து நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 9.00 மீட்டர், அகலம் 3.00 மீட்டர் மற்றும் உயரம் 2.70 மீட்டர் ஆகும். இதில் ஒரே சமயத்தில் சுமார் 10 நபர்கள் அமரக்கூடிய இடவசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான S.S. கைப்பிடியுடன் கூடிய சாய்தள வசதி, பொதுமக்கள் செல்லும் இடங்களுக்கு வரும் பேருந்துகளை தெரிந்து கொள்ள பேருந்து எண்கள், செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் அரசின் திட்டங்களை காணொளி காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள 4.26 மீ x1.20மீ அளவிலான வண்ண LED Screen வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு காமிராவும் பொருத்தப்படவுள்ளது. இவ்வாறான நிலையில், சமூக வலைதளங்களில் இப்பொருள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இச்செய்தியானது வெளியிடப்படுகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


