இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் 415 ஆண்டுகளுக்கு முன்பு ஆலயம் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை 5.30 மணிக்கு. முதலாவது திருப்பலியும், 7 மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும், மீனவமக்களுகாகவும் பங்குதந்தை கிஷோக் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு புனித சந்தியாகப்பர் கிறிஸ்தவ கீதங்கள், இசை வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் கொடியேந்தி ஸ்ரீவைகுண்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் 6.30 மணிக்கு கொடிகள் மந்திரிக்கப்பட்டு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜான் பென்ஷன் தலைமையில் வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது.

இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பங்குத்தந்தை ஜான் சுரேஷ் தலைமையில் மறையுரை நற்கருணை ஆராதனை நடந்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை வழிபட்டனர்.

திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.00 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. ஜூலை 25ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி யாக ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பர் வீதி உலா நடைபெறுகிறது.



